"உடலை மட்டும் ஜூம் செய்வதா?" - தவறான கோணங்களில் படம் எடுப்பவர்களுக்கு 'காந்தாரா' நடிகைகள் கடும் எச்சரிக்கை!
‘காந்தாரா’ திரைப்படத்தின் மூலம் நாடு முழுவதும் பிரபலமான நடிகைகள் சப்தமி கவுடா மற்றும் ருக்மணி வசந்த் ஆகியோர், பொது நிகழ்ச்சிகளில் புகைப்படக்காரர்கள் தங்களைத் தவறான கோணங்களில் படம் பிடிப்பதற்கு எதிராகக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.
சினிமா விழாக்களில் கலந்துகொள்ளும் போது, கண்ணியமற்ற முறையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்கப்படுவது தங்களுக்கு மிகுந்த மனவேதனையை அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "திரைத்துறையில் உள்ள பெண்கள் தொடர்ச்சியாக இத்தகைய அத்துமீறல்களை எதிர்கொண்டு வருகிறோம்.
பொது நிகழ்வுகளில் எங்களின் அனுமதியின்றி உடலின் சில பகுதிகளைத் தேவையற்ற முறையில் 'ஜூம்' (Zoom) செய்து படம் பிடிப்பது அவமரியாதைக்குரிய செயல். எங்களின் கடின உழைப்பையும் திறமையையும் விட, உடலை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்படும் இத்தகைய கோணங்களை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், "இது கண்ணியத்தை மீறும் செயல் என்பதைப் புகைப்படக்காரர்கள் உணர வேண்டும். நிகழ்ச்சிகளைப் பதிவு செய்பவர்கள் தொழில்முறை நெறிமுறைகளையும், அடிப்படை மரியாதையையும் கடைபிடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
இத்தகைய கசப்பான அனுபவத்தைச் சந்திக்கும் ஒவ்வொரு பெண்ணுடனும் நாங்கள் உறுதுணையாக நிற்போம்" என்றும் அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். நடிகைகளின் இந்த துணிச்சலான கருத்துக்குத் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.