கணவரை விட்டு காதலனுடன் சென்ற மகள்: வீட்டுக்கு அழைத்து தந்தை செய்த அதிர்ச்சி செயல்
இந்தியாவின் மத்தியபிரதேசம் மாநிலம் பிண்டு மாவட்டம் ஹிரியா தபக் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும், அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், திருமணத்திற்கு முன்னரே அந்தப் பெண்ணுக்கு உறவினரான இளைஞருடன் நெருங்கிய பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணமான பின்னரும் அந்த உறவு தொடர்ந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவர் கணவரை கைவிட்டு காதலனுடன் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, காதலனுடன் திருமணம் செய்து கொண்டு வேறு ஒரு கிராமத்தில் குடியிருந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் பெண்ணின் தந்தைக்கு தெரிய வந்ததை அடுத்து, அவர் கடும் கோபத்திற்குள்ளானதாக கூறப்படுகிறது. மகள் வசித்து வந்த இடத்தை அறிந்த தந்தை அங்கு சென்று, தன்னுடன் சொந்த கிராமத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். தந்தையின் பேச்சை நம்பி, பெண் ஹிரியா தபக் கிராமத்திற்கு திரும்பியுள்ளார்.
அங்கு வந்ததும், தந்தை மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் மகளை சரமாரியாக சுட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
தகவலறிந்த பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், மகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தந்தையை கைது செய்து, சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
