சென்னையில் பறவைக் காய்ச்சல் எச்சரிக்கை: H5N1 தொற்று பரவும் அபாயம் – கவனிக்க வேண்டிய அறிகுறிகள்
சமீப காலமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் காகங்கள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அந்த பறவைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், H5N1 எனப்படும் பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று இருப்பதை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தற்போது சென்னை முழுவதும் பறவைக் காய்ச்சல் தொடர்பான எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அடையாறு, வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காகங்கள் இறந்துள்ளதால், நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். குறிப்பாக பறவைகள் வாழும் பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள், கோழிகள் வளர்ப்பவர்கள் மற்றும் விலங்குகளுடன் தொடர்புடைய பணிகளில் ஈடுபடுபவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
H5N1 என்பது பொதுவாக பறவைக் காய்ச்சல் வைரஸாக அறியப்படுகிறது. இந்த வைரஸ் பெரும்பாலும் கோழி, வாத்து உள்ளிட்ட வீட்டு பறவைகளை தாக்குகிறது. மனிதர்களுக்கு நேரடியாக பரவுவது அரிதானது என்றாலும், பாதிக்கப்பட்ட பறவைகள் அல்லது விலங்குகளுடன் தொடர்பு கொண்டால் சில சமயங்களில் மனிதர்களையும் தாக்கக்கூடும். இந்த வைரஸ் சுவாச அமைப்பையும் நுரையீரலையும் பாதிக்கும் தன்மை கொண்டதாகக் கருதப்படுகிறது. சில கடுமையான நிலைகளில் இது உடலின் பிற பகுதிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
இந்த வைரஸ் மனிதர்களை பாதித்தால் அதிக காய்ச்சல், இருமல், தொண்டை வலி, வாந்தி, உடல் சோர்வு, வயிற்றுப்போக்கு, மூக்கு ஒழுகல், தசை வலி மற்றும் கண் தொற்று போன்ற அறிகுறிகள் தோன்றக்கூடும். நிலைமை தீவிரமானால் நிமோனியா, மூச்சுத்திணறல் மற்றும் உடல் உறுப்பு செயலிழப்பு போன்ற பிரச்சினைகளும் உருவாகலாம். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பறவைக் காய்ச்சல் அபாயத்தை குறைக்க சில பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது முக்கியம். நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த பறவைகளுடன் நேரடி தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும். அவற்றை தொட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். மேலும் கைகளை சோப்பால் நன்கு கழுவுவது அவசியமாகும். வீடு சுற்றிலும் பறவைகள் அசாதாரணமாக இறந்தால் உடனடியாக கால்நடை துறைக்கு தகவல் வழங்க வேண்டும். பறவைகள் அல்லது விலங்குகளை கையாள்ந்த பிறகு உடல் நலத்தில் மாற்றங்கள் ஏற்பட்டால் உடனே மருத்துவ ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.
இந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக வழங்கப்படுகின்றன. எந்த உடல்நல பிரச்சினைக்கும் தகுதியான மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிக முக்கியமானதாகும்.