முடி அதிகம் கொட்டுதா? தேங்காய் எண்ணெயுடன் இதையும் சேர்த்து பயன்படுத்துங்கள்!

முடி உதிர்வு தீர்வு, தேங்காய் எண்ணெய் பயன்கள், லாவெண்டர் எண்ணெய், நெல்லிக்காய் எண்ணெய், ரோஸ்மேரி எண்ணெய், விளக்கெண்ணெய், எலுமிச்சை எண்ணெய், தலைமுடி பராமரிப்பு, தமிழ் அழகு குறிப்புகள், இயற்கை முடி பராமரிப்பு
முடி அதிகம் கொட்டுதா? தேங்காய் எண்ணெயுடன் இதையும் சேர்த்து பயன்படுத்துங்கள்!

தற்போதைய காலகட்டத்தில் தலைமுடி உதிர்வு பிரச்சனை பலரையும் பாதிக்கிறது. ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு முடி உதிர்வது இயல்புதான். ஆனால், தலையில் கை வைக்கும் போதெல்லாம் கொத்து கொத்தாக முடி கொட்டுகிறது என்றால், அது கவனிக்க வேண்டிய ஒரு அறிகுறியாகும். மன அழுத்தம், சத்துக்களின் குறைபாடு, முறையான பராமரிப்பு இன்மை போன்ற காரணிகள் தலைமுடி உதிர்வுக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.

தலைமுடி பராமரிப்பில் தேங்காய் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. இது முடியை வலிமையாகவும், பட்டுப்போன்ற மென்மையுடனும் வைத்திருக்க உதவுகிறது. எனினும், அதிகப்படியான முடி உதிர்வை கட்டுப்படுத்தவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், தேங்காய் எண்ணெயுடன் சில சிறப்பு எண்ணெய்களை கலந்து பயன்படுத்துவது மிகவும் பலன் தரும்.

லாவெண்டர் எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தும்போது, தலையோட்டில் இரத்த ஓட்டம் மேம்பட்டு முடி வளர்ச்சி அதிகரிக்கும். 2013-ல் எவிடன்ஸ்-பேஸ்டு காம்ப்ளிமெண்டரி அண்ட் ஆல்டர்நேட்டிவ் மெடிசினில் வெளியான ஆய்வு ஒன்று, லாவெண்டர் எண்ணெய் மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை மேம்படுத்தும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, மன அழுத்தத்தினால் முடி உதிர்கிறது என்றால் இந்த கலவை சிறந்த தீர்வாக அமையும்.

வறண்ட முடி மற்றும் அதிக உதிர்வு பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காய் எண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தலாம். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் முடி வேர்களை வலுப்படுத்தி, உதிர்வைத் தடுக்க உதவுகின்றன.

பொடுகு பிரச்சனையால் முடி உதிர்வு ஏற்படுபவர்கள் எலுமிச்சை எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை கலந்து பயன்படுத்தலாம். எலுமிச்சையின் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பொடுகு உருவாக்கத்தை கட்டுப்படுத்த, தேங்காய் எண்ணெய் தலையோட்டை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். இந்த கலமையை வாரத்திற்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்துவது சிறந்தது.

ரோஸ்மேரி எண்ணெயும் முடி பராமரிப்பில் சிறந்த தீர்வாகும். 4-6 துளிகள் ரோஸ்மேரி எண்ணெயை இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் தேய்த்து வந்தால், பொடுகு குறையும், முடி வலிமை பெறும், வளர்ச்சியும் மேம்படும்.

முடி பலவீனமடைந்து உதிர்கிறது என்றால், விளக்கெண்ணெயை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்துவது சிறந்த பலன் தரும். இந்த கலவையை தலையோட்டில் படும்படி மசாஜ் செய்து வந்தால், ஊட்டச்சத்துக்கள் முடி வேர்களுக்கு கிடைத்து, முடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படும். இந்த கலமையை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி, பின்னர் மென்மையான ஷாம்பு கொண்டு அலசுவது நல்லது.

இந்த எண்ணெய் கலவைகளை முறையாக பயன்படுத்துவதன் மூலம், தலைமுடி உதிர்வை குறைத்து, ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான முடியை பெற முடியும்.

குறிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான அறிவு மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. தனிப்பட்ட சுகாதார பிரச்சனைகளுக்கு தோல் மருத்துவர் அல்லது நிபுணர் ஆலோசனை பெறுவது சிறந்தது.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர