இஸ்ரேலின் காசா மீதான படையெடுப்பு தீவிரம்; கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்

காசா நகரின் மீது சரமாரி குண்டு மழை பொழிந்து வரும் இஸ்ரேலியப் படை அந்த நகர மையப்பகுதியை நோக்கி படையினர் மற்றும் டாங்கிகளையும் முன்னேறச் செய்து வருகிறது. 

இஸ்ரேலின் காசா மீதான படையெடுப்பு தீவிரம்; கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்

காசா நகர் மீது தரைவழி படை நடவடிக்கையை ஆரம்பித்து அங்கு உக்கிர தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் அங்குள்ள ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் வெளியேறுவதற்கு தற்காலிகமான புதிய பாதை ஒன்றை திறந்துள்ளது.

காசா நகரின் மீது சரமாரி குண்டு மழை பொழிந்து வரும் இஸ்ரேலியப் படை அந்த நகர மையப்பகுதியை நோக்கி படையினர் மற்றும் டாங்கிகளையும் முன்னேறச் செய்து வருகிறது. 

ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையிலேயே இஸ்ரேலிய இராணுவம் கடந்த செவ்வாய்க்கிழமை (16) தரைவழி படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

தாக்குதல்கள் உக்கிரம் அடைந்ததை அடுத்து காசா பகுதியின் பிரதான நகர்புறமாக உள்ள காசா நகரில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற ஆரம்பித்துள்ளனர். 

இந்நிலையில் சலாஹ் அல் தீன் வீதி வழியாக காசா நகரில் இருந்து மக்கள் வெளியேற தற்காலிக பாதை ஒன்றை இஸ்ரேல் இராணுவம் நேற்று திறந்தது.

இன்று (18) நண்பகலில் இருந்து 48 மணி நேரத்திற்கு இந்தப் பாதை திறந்திருக்கும் என்று இஸ்ரேல் இராணுவத்தின் அரபு மொழி பேச்சாளர் கர்ணல் அவிசாய் அட்ராயீ குறிப்பிட்டுள்ளார். 

இதுவரை கடற்கரை பாதை வழியாக மேலும் தெற்காக ‘மனிதாபிமான வலயத்திற்கு’ செல்லும்படியே காசா நகர மக்களை இஸ்ரேலிய இராணுவம் வலியுறுத்தி வந்தது.