குழந்தையுடன் பெண் சடலம் – இலங்கை மண்சரிவு நடந்த இடத்தில் பதிவான சோக சம்பவம்

அவர்களின் சடலங்களை மீட்க அரசு அல்லது மீட்புக் குழுக்களின் உதவி இல்லாமல், உறவினர்களும் பொது மக்களும் தங்கள் கைகளாலேயே மண்ணைத் தோண்டிக் கொண்டிருக்கின்றனர்.

குழந்தையுடன் பெண் சடலம் – இலங்கை மண்சரிவு நடந்த இடத்தில் பதிவான சோக சம்பவம்

இலங்கையின் பரகல்ல பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். ஆனால், அவர்களின் சடலங்களை மீட்க அரசு அல்லது மீட்புக் குழுக்களின் உதவி இல்லாமல், உறவினர்களும் பொது மக்களும் தங்கள் கைகளாலேயே மண்ணைத் தோண்டிக் கொண்டிருக்கின்றனர். பிபிசி தமிழ் டிசம்பர் 3 அன்று அந்த அவல தளத்துக்குச் சென்று, மனதை உலுக்கும் காட்சிகளை நேரில் பதிவு செய்தது.

பரகல்ல், நாவலபிட்டி நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த ஒரு மலைக்கிராமம். இங்கு பெரும்பாலும் இந்திய வம்சாவளித் தமிழர்கள், தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்து வாழ்கின்றனர். இவர்களில், பரகல்ல மேற்பிரிவில் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒரு பழைய லயன் அறை தொகுதியில் வாழ்ந்து வந்தனர்.

நவம்பர் 27, 2025 இரவு 7 மணியளவில், அந்த லயன் அறைகள் மீது பாரிய கற்களுடன் கூடிய மண்சரிவு ஏற்பட்டது. இதில் குறைந்தது 14 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

பிபிசி தமிழ் செய்தியாளர்கள் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது, தரையில் ரத்தம் கசிவதை அவதானித்தனர். சற்று மண்ணை அகற்றிய போது, 25 வயது பெண் ஒருவரின் சடலம் மண்ணுக்குள் புதையுண்டிருந்தது.

அந்த இடத்தைத் தோண்டிய பிரதேச மக்கள், அவரது கால்களுக்கு அருகில் ஒரு சிறு குழந்தையின் சடலத்தையும், அதற்கு அடுத்தடுத்து மற்றொரு பெண்ணின் சடலத்தையும் கண்டெடுத்தனர். அவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது.

இந்த மூன்று சடலங்களும் அருகிலுள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் வைக்கப்பட்டு, பின்னர் பிரதேச மக்கள் தங்களாலேயே குழி தோண்டி முறைப்படி அடக்கம் செய்தனர்.

பிரதேச மக்கள் திரும்பத் திரும்பக் கூறுவது ஒன்றுதான்:

“எங்களுக்கு பெக்கோ (மண் அகழும் இயந்திரம்) தேவை. அது இருந்தால் மட்டுமே கற்களுக்கு அடியில் சிக்கிய சடலங்களை மீட்க முடியும்.”

சாந்தகுமார் என்ற உள்ளூர் மகன், “அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்த உதவியும் இல்லை. பெக்கோ ஒன்று மட்டும் கொடுத்தால் போதும்” என்று உணர்ச்சிவசப்பட்டு பிபிசியிடம் கூறினார்.

அயல் ஊர் இளைஞரான சுதாவும், “7 நாட்களாகின்றன. அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நாங்களே ஐந்து சடலங்கள் தோண்டினோம். போலீசும், இராணுவமும் வந்து எங்களுக்கு தோண்ட சொல்லிவிட்டு, மேலே சாலையில் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று குற்றம்சாட்டினார்.

இந்த மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு மீட்புக் குழுக்கள் இதுவரை அனுப்பப்படவில்லை என்பதை பிபிசி குழு உறுதிப்படுத்தியது. குறைந்தபட்சம் மண் அகழும் இயந்திரங்கள்கூட அரசாங்கம் வழங்கவில்லை என்பது பிரதேச மக்களின் பொதுவான குற்றச்சாட்டு.

பெரிய கற்கள் மீது மண்ணும் தேங்கியிருக்க, அவற்றை கைகளால் உடைக்க முடியாமல், துர்நாற்றம் வீசும் இடங்களில் இன்னும் பலர் சடலங்கள் புதையுண்டிருக்கலாம் என பயம் நிலவுகிறது.

நன்றி - பிபிசி