சிறையில் நாமல் ராஜபக்ஷ... மீண்டும் அரசியலில் களமிறங்கும் மஹிந்த ராஜபக்ஷ
நாமல் ராஜபக்ஷவின் கைது நடவடிக்கைக்கு மத்தியிலும் அனுராதபுரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் மக்கள் பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்துக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இந்த வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இப்பேரணி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், பேரணியைச் சீர்குலைக்கும் நோக்கிலேயே நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் கைது நடவடிக்கையையும் பொருட்படுத்தாமல், திட்டமிட்டபடி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அநுராதபுர பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.