மூத்த பெண்ணைத் திருமணம் செய்தால் குடும்பம் செழிக்குமா? வைரலாகும் சீனப் பழமொழியின் உண்மைப் பின்னணி

தன்னை விட எட்டு வயது மூத்த பெண்ணைத் திருமணம் செய்தால் குடும்பம் செழிக்கும் என்ற சீனப் பழமொழியின் உண்மைப் பின்னணி மற்றும் திருமண வெற்றி குறித்த ஆய்வுத் தகவல்கள்.


மூத்த பெண்ணைத் திருமணம் செய்தால் குடும்பம் செழிக்குமா? வைரலாகும் சீனப் பழமொழியின் உண்மைப் பின்னணி

சமூக வலைத்தளங்களில் திருமண வயது வித்தியாசம் தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து முன்னிலைப் பெற்று வரும் நிலையில், தன்னை விட எட்டு வயது மூத்த பெண்ணைத் திருமணம் செய்தால் குடும்பம் செழிக்கும் என்ற சீனப் பழமொழி தற்போது இணையத்தில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஆண்கள் தங்களை விட வயது குறைந்த பெண்களையே திருமணம் செய்ய வேண்டும் என்ற வழக்கமான சமூகக் கண்ணோட்டத்திற்கு மாறாக அமைந்த இந்த கருத்து பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதில் குறிப்பிடப்படும் எட்டு என்ற எண் நேரடியான மந்திரக் குறியீடு அல்ல என்றும், அதற்குப் பின்னாலுள்ள முதிர்ச்சியே இதன் முக்கிய நோக்கம் என்றும் சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பழங்காலத்தில் திருமணம் என்பது வெறும் காதல் சார்ந்த பிணைப்பாக மட்டுமல்லாமல், பொறுப்புணர்வு மிக்க கூட்டு வாழ்க்கையாகவும் கருதப்பட்டது.

குடும்பத்தை வழிநடத்துவதற்குத் தேவையான வாழ்க்கை அனுபவம், நிதானம், பொறுமை மற்றும் நிர்வாகத் திறன் ஆகியவை மூத்த பெண்களிடம் அதிகம் காணப்படுவதால் குடும்பம் செழிக்கும் என்று நம்பப்பட்டது. இங்குச் செழிப்பு என்பது பொருளாதார வளர்ச்சியை மட்டும் குறிக்காமல், குடும்பத்தின் மன அமைதி, நல்ல முடிவுகள் மற்றும் ஒற்றுமையையும் உள்ளடக்கியதாகும்.

அதேவேளையில், பெண் குறைந்த வயதுடையவராக இருக்க வேண்டும் என்ற வழக்கமான எண்ணத்தை நவீன காலத் தம்பதிகள் மாற்றி வருகின்றனர். வயது வித்தியாசத்தைக் கடந்து மன ஒற்றுமை, பரஸ்பர புரிதல் மற்றும் பகிரப்பட்ட இலக்குகளுக்கே இன்றைய இளைஞர்கள் முன்னுரிமை அளிக்கின்றனர்.

மூத்த பெண்ணின் தன்னம்பிக்கையும், குறைந்த வயதுடைய கணவரின் புதிய சிந்தனைகளும் இணையும்போது அத்தகைய திருமண பந்தங்கள் வெற்றிகரமாக அமைவதாகக் கருதப்படுகிறது.

நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் வெளியிட்ட ஆய்வு முடிவின்படி, வயது வித்தியாசம் அதிகம் உள்ள தம்பதிகளிடையே தொடக்கக் காலத்தில் மகிழ்ச்சி அதிகமாகக் காணப்பட்டாலும், காலப்போக்கில் அந்த மகிழ்ச்சியின் அளவு குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, திருமண வாழ்க்கையின் வெற்றிக்கு வயது மட்டுமே உத்தரவாதமாக அமைய முடியாது என்றும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் ஆரோக்கியமான தகவல் தொடர்பும் மட்டுமே நீண்ட கால வாழ்க்கைக்கு அடித்தளமாக விளங்குவதாகவும் நவீன ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்குத் தம்பதிகளிடையே பிரச்சினைகளைக் கையாண்டு சுமுகமாகத் தீர்க்கும் திறன், நிதி மேலாண்மை அறிவு, வெளிப்படையான பேச்சுவார்த்தை மற்றும் ஒருவரை ஒருவர் தாழ்த்தாமல் மதிக்கும் பரஸ்பர மரியாதை ஆகியவையே இன்றியமையாத காரணிகளாகப் பார்க்கப்படுகின்றன.

இதனால், எட்டு வயது மூத்த பெண் என்ற பழமொழி முதிர்ச்சிக்கும் அனுபவத்திற்கும் அளிக்கப்பட்ட முக்கியத்துவமே தவிர, திருமண வாழ்க்கையின் வெற்றிக்கு வயது வித்தியாசம் ஒரு தடையோ அளவுகோலோ அல்ல என்பது தெளிவாகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க