கனடாவில் கல்வி கற்கத் திட்டமிடுவோருக்கு விரைவுபடுத்தப்பட்ட குடியுரிமைச் சான்றிதழ் நடைமுறை அறிமுகம்

Published on: 07 Sep 2026, 04:58 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

கனடாவில் கல்வி கற்கத் திட்டமிட்டுள்ள தகுதியான நபர்களுக்கு குடியுரிமைச் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை கனேடிய குடிவரவு அமைச்சு அவசர அடிப்படையில் விரைவுபடுத்தியுள்ளது.

கனடாவில் கல்வி கற்கத் திட்டமிடுவோருக்கு விரைவுபடுத்தப்பட்ட குடியுரிமைச் சான்றிதழ் நடைமுறை அறிமுகம்

கனடாவில் பாடசாலைகள், கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கத் திட்டமிட்டுள்ள தகுதியான நபர்களுக்கு அவர்களின் கனேடிய குடியுரிமைச் சான்றிதழ் விண்ணப்பங்களை விரைவாகப் பரிசீலிக்கும் விசேட நடைமுறையை அந்நாட்டு குடிவரவு அமைச்சு முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் அவர்கள் தமது கல்விப் பருவத்தின் ஆரம்பத்திலேயே குடியுரிமைச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கனேடிய வம்சாவளி ஊடாக குடியுரிமை பெறுவதற்கான முதல் தலைமுறை கட்டுப்பாட்டை அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலம் சி-3 நீக்கியதைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் உள்ள பல இலட்சக்கணக்கானோர் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கத் தொடங்கினர். இந்த விண்ணப்பக் குவியல் காரணமாக சாதாரண குடியுரிமைச் சான்றிதழ் பரிசீலனைக்கான காத்திருப்பு காலம் சுமார் இருபத்தைந்து மாதங்களாக அதிகரித்துள்ளது.

இந்த தாமதத்தைக் குறைக்கும் நோக்கில், கனேடிய குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சு மட்டுப்படுத்தப்பட்ட சில சூழ்நிலைகளின் கீழ் அவசர பரிசீலனை வசதியை வழங்குகிறது. குறிப்பாக, கனேடிய உயர்கல்வி நிறுவனங்களில் பயிலத் திட்டமிடுவோர் கல்வி சார்ந்த அவசரத் தேவையின் அடிப்படையில் விரைவுபடுத்தப்பட்ட விண்ணப்பப் பரிசீலனையைக் கோர முடியும்.

இத்தகைய அவசர பரிசீலனையைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், கனேடிய கல்வி நிறுவனமொன்றில் இருந்து பெறப்பட்ட அனுமதி கடிதம் மற்றும் அவசர பரிசீலனைக்கான தேவையை விளக்கும் கடிதம் ஆகியவற்றை தமது பூரணப்படுத்தப்பட்ட குடியுரிமை விண்ணப்ப ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். இருப்பினும், ஒவ்வொரு கோரிக்கையையும் அதன் உண்மைத்தன்மை மற்றும் தகுதியின் அடிப்படையிலேயே அதிகாரிகள் பரிசீலித்து தீர்மானிப்பார்கள் என்றும் குறித்த காலத்திற்குள் சான்றிதழ் வழங்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் குடிவரவு அமைச்சு தெரிவித்துள்ளது.

கனேடிய குடியுரிமைச் சான்றிதழைப் பெறுவதன் மூலம் சர்வதேச மாணவர்களுக்கான அதிகப்படியான கல்விக் கட்டணத்திற்குப் பதிலாக, உள்நாட்டு மாணவர்களுக்கான குறைந்த கல்விக் கட்டணத்தில் பயில முடியும். அத்துடன், கல்வி பயிலும் காலப்பகுதியில் சர்வதேச மாணவர்களுக்கு விதிக்கப்படும் வாரத்திற்கு இருபத்து நான்கு மணித்தியால பணி வரம்பு இன்றி முழுநேர வேலைவாய்ப்புகளில் ஈடுபடும் உரிமையையும் அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW