வத்தளையில் இளம் பெண் கொடூரமாகக் கொலை: சந்தேக நபர் சடலமாக மீட்பு
வத்தளை பள்ளியவத்தை பகுதியில் 18 வயது இளம் பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில், சந்தேக நபர் அதுருகிரியவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வத்தளை, பள்ளியவத்தை, டேன் லங்கா வீதியிலுள்ள வீடொன்றில் 18 வயதுடைய இளம் பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண், சந்தேக நபருடன் சட்டப்பூர்வ திருமணமின்றி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.
சந்தேக நபர் அப்பெண்ணின் மீது தொடர்ச்சியாக சந்தேகம் கொண்டு வந்த நிலையில், ஏற்பட்ட தகராறில் அவரை குளியலறைக்கு அழைத்துச் சென்று கத்தியால் கழுத்தை அறுத்தும், கண்களைத் தோண்டியும் இந்தக் கொலையைச் செய்துள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான உடுப்புஸ்ஸல்லாவ, சென்ட் தோட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர், அதுருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் விஷம் அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்த சந்தேக நபர் மீது கடந்த 2020 ஆம் ஆண்டு அவிசாவளைப் பகுதியில் நபரொருவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்தமை தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இக்கொலைச் சம்பவம் தொடர்பாக வத்தளை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.