இறந்த உடலை எரித்தாலும் சாம்பலாகாத 'அந்த ஒரு' உறுப்பு.. விஞ்ஞானிகள் வியக்கும் மனித உடலின் அதிசயம்!
மனித உடல் 700 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் எரிக்கப்பட்டுச் சாம்பலானாலும், பற்கள் மட்டும் ஏன் அழிவதில்லை? அதன் பின்னணியில் உள்ள அறிவியல் காரணங்கள் மற்றும் தகன நிலைகள் குறித்த சுவாரசியத் தொகுப்பு.
நெருப்பு என்பது பஞ்சபூதங்களில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஒரு சக்தியாக இருந்தாலும், அனைத்து மதங்களிலும் அது தூய்மையின் அடையாளமாகவும், புனிதமானதாகவும் கருதப்படுகிறது. அதனால்தான், மனிதன் இறந்த பிறகு அவனது உடல் நெருப்பில் தாரைவார்க்கப்பட்டுத் தகனம் செய்யப்படுகிறது.
மனித உடல் என்பது இயற்கையின் ஒரு நடமாடும் அதிசயமாகும். மரணத்திற்குப் பிறகு, எவ்வளவு கடுமையான வெப்பத்தில் உடலை எரித்தாலும், ஒட்டுமொத்த சதைகளும் எலும்புகளும் சாம்பலாக மாறினாலும், மனித உடலின் ஒரு குறிப்பிட்ட பாகம் மட்டும் முழுமையாக அழியாமல் எஞ்சியிருக்கும். ஆச்சரியமளிக்கும் அந்த உறுப்பு எது, அதன் பின்னணியில் உள்ள அறிவியல் என்ன என்பதை இங்கு விரிவாகக் காண்போம்.
அதீத வெப்பத்திலும் அழியாத மனிதப் பல்!
உடல் தகனத்தின் போது எவ்வளவு கடுமையான நெருப்புச் சூழ்ந்தாலும், முழுமையாக எரிந்து போகாத மனித உடலின் ஒரே பாகம் பற்கள் (Teeth) ஆகும்.
உடல் எரிக்கப்படும் போது, முதலில் உடலின் மென்மையான திசுக்கள் (Soft tissues) மற்றும் சதைகள் எரிந்து சாம்பலாகின்றன. ஆனால், பற்கள் ஒரு தனித்துவமான மற்றும் மிகக் கடினமான அமைப்பைக் கொண்டுள்ளன. பற்களின் மென்மையான திசுக்கள் ஆரம்பத்தில் எரிந்துவிட்டாலும், உடலின் மிகக் கடினமான திசுவான 'எனாமல்' (Enamel) மட்டும் அழியாமல் அப்படியே எஞ்சியிருக்கும்.
இதற்குப் பின்னுள்ள அறிவியல் காரணம் என்ன?
மனிதப் பற்கள் கால்சியம் பாஸ்பேட் (Calcium Phosphate) எனும் வேதிப்பொருளால் உருவானவை. இயற்கையிலேயே இந்த வேதிப்பொருள் எளிதில் சாம்பலாக மாறாத அசாத்தியத் தன்மையைக் கொண்டது. பற்களில் நிறைந்துள்ள இந்த கால்சியம் பாஸ்பேட் சத்து காரணமாகவே, அவை அதீத நீடித்து உழைக்கும் தன்மையைப் பெற்று நெருப்பிலும் அழியாமல் தனித்து நிற்கின்றன. (நகங்களும் தகனத்தின் போது எரியாமல் எஞ்சியிருக்கும் என்று சிலரால் கூறப்பட்டாலும், அது அறிவியல் பூர்வமாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை).
எலும்புகள் சாம்பலாக எவ்வளவு வெப்பநிலை தேவை?
மனித உடலின் எலும்புகளை முழுமையாக எரித்துச் சாம்பலாக்குவதற்கு மிக அதிக வெப்பநிலை தேவைப்படுகிறது.
-
தேவைப்படும் வெப்பநிலை: 1292 டிகிரி ஃபாரன்ஹீட் கிட்டதட்ட 700 டிகிரி செல்சியஸ்.
-
இவ்வளவு அதிகமான வெப்பநிலையில் உடல் எரிக்கப்பட்டாலும் கூட, பற்கள் மற்றும் சில முக்கிய எலும்புத் துண்டுகளில் உள்ள கால்சியம் பாஸ்பேட் முழுமையாகச் சாம்பலாவதில்லை. இதனால்தான் தகனத்திற்குப் பிறகும் பற்களும், சில எலும்புகளும் எஞ்சியிருக்கின்றன.
உடலின் கொழுப்புத் தன்மையும் எலும்பு எரிதலும்:
அறிவியல் ஆய்வுகளின்படி, மனித உடலின் எலும்புக்கூடு ஒரே சீராக எரிவதில்லை. உடலில் கொழுப்பு அமைந்துள்ள விதம் மற்றும் வெப்பத்தின் தாக்கம் ஆகியவை எலும்புகள் எரியும் வேகத்தைத் தீர்மானிக்கின்றன. உடலின் மையப்பகுதியில் அதிகளவு கொழுப்பு குவிந்திருப்பதால் அங்குள்ள எலும்புகள் தீவிரமாக எரிகின்றன; ஆனால், கைகள் மற்றும் கால்களில் உள்ள புறப்பகுதி எலும்புகள் ஒப்பிட்டளவில் குறைந்த தீவிரத்துடனேயே எரிகின்றன.
தகனத்தின் போது நிமிடத்திற்கு நிமிடம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வுகளின்படி, 670 முதல் 810 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் ஒரு மனித உடல் எரியும் போது ஏற்படும் மாற்றங்கள் இதோ:
-
முதல் 10 நிமிடங்கள்: உடலின் வெளிப்புறத் திசுக்கள் மற்றும் சதைகள் உருகத் தொடங்குகின்றன.
-
20 நிமிடங்கள்: மண்டை ஓட்டின் முன்புற எலும்பின் மீதுள்ள மென்மையான திசுக்கள் உருகி, மண்டை ஓட்டு அறையின் மெல்லிய வெளிச்சுவரான 'டபுலா எக்ஸ்டர்னா'வில் (Tabula Externa) விரிசல்கள் தோன்றுகின்றன.
-
30 நிமிடங்கள்: தோல் பகுதி முழுவதும் முழுமையாக எரிந்து, அதற்குக் கீழே உள்ள உள் உடல் பாகங்கள் எரியத் தொடங்குகின்றன.
-
முழுமையான தகனம்: ஒரு மனித உடல் முழுமையாக எரிந்து சாம்பலாவதற்குச் சுமார் 2 முதல் 3 மணிநேரம் வரை ஆகிறது.
இத்தனை மாற்றங்களுக்கு மத்தியிலும், மனிதனின் அடையாளம் சொல்லும் பற்கள் மட்டும் இறுதிவரை அழியாமல் இருப்பது இயற்கையின் விசித்திரமான படைப்புகளில் ஒன்றாகும்.