கற்பிட்டியில் கூரிய ஆயுதத் தாக்குதலுக்கு உள்ளான கர்ப்பிணிப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
புத்தளம் கற்பிட்டி பாலக்குடா பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 26 வயதுடைய கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த நிலையில், 36 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம், கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலக்குடா பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 26 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பலத்த காயங்களுடன் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண், வயிற்றில் இருந்த சிசுவுடன் உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் தனது கணவரைப் பிரிந்து சந்தேகநபருடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவிவந்த குடும்பத் தகராறே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற 45 நிமிடங்களுக்குள் 36 வயதுடைய சந்தேகநபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கற்பிட்டி பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.