அதிபர் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக CNN உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் வழக்கு
வெள்ளை மாளிகை விதித்த தடையை எதிர்த்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மற்றும் அதிகாரிகள் மீது CNN, MS NOW, Politico ஆகிய ஊடக நிறுவனங்கள் வாஷிங்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
வெள்ளை மாளிகைக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மற்றும் நிர்வாக அதிகாரிகள் மீது CNN, MS NOW, Politico ஆகிய செய்தி நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
வெள்ளை மாளிகை விதித்துள்ள இந்த நடவடிக்கை தங்களது பேச்சு சுதந்திரம் மற்றும் ஊடகச் சுதந்திரத்தை அப்பட்டமாக மீறுவதாக அந்த நிறுவனங்கள் குற்றம்சாட்டியுள்ளன.
டிரம்ப் நிர்வாகத்தின் இந்தத் தடை உத்தரவை உடனடியாகத் தடுத்து நிறுத்தும் வகையில் தற்காலிக தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி, தலைநகர் வாஷிங்டனில் உள்ள நீதிமன்றத்தில் செய்தி நிறுவனங்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் தலையீடு இல்லாத சுதந்திரமான ஊடகச் சூழலை நிலைநாட்டுவதற்கு இத்தகைய சட்டப் போராட்டம் மிகவும் அவசியமானது என்று அந்நிறுவனங்கள் தங்களின் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.
முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமை இந்த ஊடக நிறுவனங்களுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைய அதிபர் டோனல்ட் டிரம்ப் தடை விதித்தார். அந்த நிறுவனங்கள் தன்னைப்பற்றி உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் பொய்களையும் புனைந்து பரப்பி வருவதாகவும், அதனைத் தடுத்து நிறுத்தவே இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.