தோட்டக் குளத்து மீன்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த 51 வயது நபர் கைது... அதிர்ச்சி சம்பவம்
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அண்டை வீட்டுத் தோட்டக் குளத்து கோய் மீன்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த 51 வயது நபர் சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், அண்டை வீட்டுத் தோட்டக் குளத்தில் இருந்த வளர்ப்பு மீன்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் 51 வயதுடைய சுத்திசாய் பூன்லெர்ட் என்ற நபரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துமீறி நுழைதல், பொது ஒழுங்கீனம் மற்றும் விலங்கு வதைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாங்காக்கின் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் பாபி அனோங் என்பவர் தனது வீட்டுத் தோட்டக் குளத்தில் விலைமதிப்பற்ற கோய் வகை மீன்களை வளர்த்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாகக் குளத்தில் இருந்த மீன்கள் உடல்கள் வளைந்த நிலையில் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தன. இதனால் சந்தேகமடைந்த பாபி அனோங், தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்புப் பதிவுகளை ஆய்வு செய்துள்ளார்.
அந்தக் கண்காணிப்புப் பதிவில், நள்ளிரவு வேளையில் ஆடைகளின்றி அத்துமீறி நுழைந்த சுத்திசாய் பூன்லெர்ட், குளத்தில் இறங்கி கோய் மீன்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது பதிவாகியிருந்தது. இதனால் ஏற்பட்ட உடல் ரீதியான அழுத்தமும் காயங்களுமே மீன்களின் இறப்புக்குக் காரணம் என்பது தெரியவந்தது.
நள்ளிரவில் இந்த சம்பவத்தைக் கண்காணிப்புக் கேமராவில் நேரில் பார்த்த உரிமையாளர் பாபி அனோங், குற்றவாளியைத் துரத்திச் சென்றபோது கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். சந்தேகநபர் அப்போது சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார்.
உரிமையாளர் அளித்த சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் புகாரின் அடிப்படையில் சுத்திசாய் பூன்லெர்ட்டை கைது செய்த பொலிஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், ஆரம்பத்தில் குளத்தில் குளிக்கவே இறங்கியதாகவும், நீந்திக்கொண்டிருந்த கோய் மீன்களைப் பார்த்ததும் உணர்வு தூண்டப்பட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
முட்கள் உள்ள சக்கர் மீன்களுக்குப் பதிலாக மென்மையான கோய் மீன்களைத் தேர்ந்தெடுத்ததாகவும், இதற்கு முன்னரும் அண்டை வீடுகளில் உள்ள நாய்க்குட்டிகள் மற்றும் பொம்மைகளுக்கு இதுபோன்ற தொல்லைகளைக் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.