ஹொங்கொங் மொடல் கொலை வழக்கு: முன்னாள் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு எதிரான விசாரணை ஆரம்பம்

ஹொங்கொங் மொடல் எபி சோய் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது முன்னாள் கணவர் உள்ளிட்ட மூவருக்கு எதிரான பிரதான விசாரணை ஹொங்கொங் மேல் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.


ஹொங்கொங் மொடல் கொலை வழக்கு: முன்னாள் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு எதிரான விசாரணை ஆரம்பம்

ஹொங்கொங்கின் பிரபல மொடலும் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவருமான எபி சோய் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை, மூன்று ஆண்டுகளின் பின்னர் ஹொங்கொங் மேல் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. 

இந்தச் சம்பவத்தில் எபி சோயின் முன்னாள் கணவர், அவரது தந்தை மற்றும் சகோதரர் ஆகியோர் மீதான கொலைக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் ஜூரிகள் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் காணாமல் போயிருந்த 28 வயதான எபி சோயின் உடற்பாகங்கள், ஹொங்கொங்கின் புறநகர்ப் பகுதியான டாய் போ கிராமத்திலுள்ள வாடகை வீடொன்றில் இருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டன.

அவரது உடல் பாகங்கள் துண்டுகளாக்கப்பட்டு குளிர்சாதனப் பெட்டியிலும், பாரிய சூப் பாத்திரத்திலும் சமைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டமை உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்தக் கொலை தொடர்பில் எபி சோயின் முன்னாள் கணவரான அலெக்ஸ் குவாங், அவரது சகோதரரான அந்தனி குவாங் மற்றும் ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தரான அவர்களது தந்தை குவாங் கௌ ஆகிய மூவர் மீதும் கூட்டுக்கொலைக் குற்றச்சாட்டும், உடலை சட்டவிரோதமாக அப்புறப்படுத்திய குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளன. இவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் முகக்கவசம் அணிந்தவாறு அமைதியாகக் காணப்பட்டனர். வழக்கு விசாரணையை நேரடியாகப் பார்வையிட பெருமளவிலான பொதுமக்கள் திரண்டிருந்த காரணத்தினால், நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நேரடி ஒளிபரப்பு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சுமார் 45 நாட்கள் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த வழக்கின் ஆரம்பக்கட்ட நடைமுறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஜூரிகள் தெரிவுக்குப் பின்னர் அரச சட்டத்தரணிகளின் ஆரம்ப உரை இடம்பெறவுள்ளது.

நிதி மற்றும் சொத்துப் பிணக்குகள் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற விசாரணைகளின் ஊடாக மேலதிக உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க