நள்ளிரவில் ஆடைகளின்றி ஊரைசுற்றி வலம் வந்த தம்பதி: அதிர்ச்சி சம்பவம்
திருப்பத்தூர் அருகே வினோத பூஜை செய்து ஆடைகளின்றி வலம் வந்து ஊர்மக்களை மிரட்டிய தம்பதியை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் அருகே தங்கள் மீது கருப்பசாமி இறங்கியுள்ளதாகக் கூறி, ஆடைகளின்றி தெருக்களில் வலம் வந்த தம்பதியை ஊர் பொதுமக்கள் பிடித்து கயிற்றால் கட்டி காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பிட்ட தம்பதியினர் கடந்த சில நாட்களாக தங்கள் வீட்டிற்குள் வினோதமான பூஜைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக ஆடைகளின்றி ஊருக்குள் வலம் வந்துள்ளனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவர்களைத் தட்டிக்கேட்டபோது, தங்களை எதிர்த்தால் தடம் தெரியாமல் நாசமாகிவிடுவீர்கள் என்று சாபமிட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும், சாமி வந்த கோலத்தில் இருக்கும் தங்களை செல்போனில் நேரலையாகப் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்குமாறு ஊர் மக்களை வற்புறுத்தி ரகளையிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் தொடர் செயலால் பொறுமையிழந்த கிராம மக்கள், ஒன்றுதிரண்டு இருவரையும் மடக்கிப் பிடித்து கயிறுகளால் கட்டி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பொதுமக்களின் பிடியில் இருந்த தம்பதியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.