நல்லூரில் திலீபனின் சிலை அகற்றம்: முறைப்பாட்டின் அடிப்படையிலேயே நடவடிக்கை என பொலிஸ் தரப்பு விளக்கம்
நல்லூரில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் திருவுருவச்சிலையை பொலிஸார் அகற்றியுள்ளனர். முறைப்பாட்டின் பேரிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், அரசு மற்றும் தமிழரசுக் கட்சி இணைந்து இதனைச் செய்ததாக செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபனின் திருவுருவச்சிலை நேற்று காலை பொலிஸாரால் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினரை நினைவுகூரும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலும், இன நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகப் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ள அதேவேளை, அரசாங்கமும் இலங்கை தமிழரசுக் கட்சியும் இணைந்தே இச்செயற்பாட்டை முன்னெடுத்துள்ளதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் நேற்று முன்தினம் நல்லூர் நினைவிடத்தில் இடம்பெற்றன.
இந்நிலையில் நேற்று காலை 6.30 மணியளவில் இரண்டு வாகனங்களில் அங்கு வந்த சுமார் 15 பொலிஸ் அதிகாரிகள், ஏற்பாட்டுக் குழுவினருக்கு எவ்வித முன்னறிவித்தலும் வழங்காமல் திலீபனின் திருவுருவச்சிலையை அகற்றித் தமது வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.
இச்சம்பவம் குறித்து விளக்கமளித்த பொலிஸ் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வூட்லர், தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் ஒருவரை நினைவுகூரும் வகையில் 'எல்லாளன் படை' என்ற குழுவொன்று செயற்படுவதாகக் கிடைத்த முறைப்பாட்டின் பேரிலேயே சிலை அகற்றப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும், யுத்த மனநிலையை உருவாக்கக்கூடிய சூழலைத் தவிர்க்கவுமே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
திலீபனின் நினைவேந்தலுக்காக யாழ். மாநகர சபையினால் 2026 செப்டம்பர் 26ஆம் திகதி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகத் தகவல் கிடைத்துள்ளதாகவும், இவ்விவகாரம் குறித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஏற்கனவே விளக்கமளிக்கப்பட்டு அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை, பொலிஸாரின் இந்நடவடிக்கைக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் எவ்வித முன்னறிவிப்புமின்றி பாதணிகளுடன் வந்து சிலையை உடைத்து அகற்றியுள்ளதாகவும், இது அரசாங்கத்தின் இனவெறி மனப்பான்மையையே வெளிப்படுத்துகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
தேர்தல் காலத்தில் நினைவேந்தல்களுக்கு அனுமதி தருவதாகக் கூறி தமிழ் மக்களை ஏமாற்றிய தற்போதைய அரசாங்கம், மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் கொள்கையையே தொடர்வதாக அவர் விமர்சித்தார்.
மேலும், தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் சி.வி.கே. சிவஞானம் இச்சிலையை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்ததைச் சுட்டிக்காட்டிய கஜேந்திரன், பொலிஸாருடன் தமிழரசுக் கட்சியும் தற்போதைய அரசும் இணைந்தே இந்தச் சிலை அகற்றலை அரங்கேற்றியுள்ளதாகக் குற்றம் சுமத்தினார்.