உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: 15 பேருக்கு தலா 200 ஆண்டுகளுக்கு அதிகமாக கடூழிய சிறைத்தண்டனை; கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 15 பேருக்கு தலா 200 ஆண்டுகளுக்கும் அதிக கடூழிய சிறைத் தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுடன் 9 பேரை விடுவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 15 பேருக்கு தலா 200 ஆண்டுகளுக்கும் அதிக கடூழிய சிறைத் தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2019 ஏப்ரல் 21ஆம் திகதி கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களுக்குச் சதித்திட்டம் தீட்டியமை, அவற்றுக்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகளாகக் காணப்பட்ட 15 பேரில் ஐந்து பேருக்கு தலா 200 ஆண்டுகளும், மேலும் ஐந்து பேருக்கு தலா 220 ஆண்டுகளும், நான்கு பேருக்கு தலா 240 ஆண்டுகளும், ஒருவருக்கு 260 ஆண்டுகளும் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், அவர்களுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை அரசுடைமையாக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கில் மொத்தம் 24 பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர். அவர்களில் 15 பேர் குற்றவாளிகளாக உறுதிப்படுத்தப்பட்டு தண்டனை பெற்றுள்ள நிலையில், ஏனைய ஒன்பது பேரும் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.