வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - இலங்கையில் கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை!
வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடப்பதால் இலங்கையின் பல பகுதிகளில் 100 மி.மீ கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை ஊடறுத்து கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இலங்கையின் தென்மேற்கு பிராந்தியங்களில் நிலவி வரும் மழையுடனான தீவிர வானிலை மேலும் நீடிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
மேற்கு-மத்திய மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடாவில் உருவான இந்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இந்தியக் கரையோரப் பகுதிகளை கடந்து வருகின்றது. இந்த அமைப்பின் நேரடித் தாக்கம் இலங்கை மீது இல்லை என்ற போதிலும், அதனை நோக்கி தீவிரமடைந்து வீசும் பலத்த காற்றோட்டம் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் கனமழை தொடரும் சூழல் உருவாகியுள்ளது.
இதன் அடிப்படையில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைவிடாது இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான அதி கனமழை பதிவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் மிதமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிக பலத்த காற்றுடன் கடுமையான மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.