துபாயிலிருந்து இஸ்ரேல் சென்ற விமானத்தில் சதித்திட்டம் முறியடிப்பு: 180 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய கேப்டன் சுமித் மச்சர்
துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற ஃப்ளை துபாய் விமானத்தில் துணை விமானி நடத்திய தாக்குதலை முறியடித்து, 180-க்கும் மேற்பட்ட பயணிகளைக் காப்பாற்றிய இந்திய கேப்டன் சுமித் மச்சருக்கு சர்வதேச அளவில் பாராட்டுகள் குவிகின்றன.
துபாயில் இருந்து இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகருக்கு 174 பயணிகள், விமானப் பணியாளர்கள் என 180-க்கும் மேற்பட்டோருடன் புறப்பட்ட ‘ஃப்ளை துபாய்’ FZ 1073 விமானத்தில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஜோர்டான் வான்பரப்பில் 33,000 அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி திடீரென தலைமை விமானியான இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் சுமித் மச்சரைக் கத்தியால் குத்திவிட்டு விமானத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
பின்னர் விமானத்தைத் தரையில் மோதித் தற்கொலைத் தாக்குதல் நடத்தும் நோக்கில், வெறும் இரண்டு நிமிடங்களில் 14,000 அடி அளவுக்கு விமானத்தைச் செங்குத்தாகக் கீழ்நோக்கிச் சரியச் செய்தார்.
கடுமையான ரத்தப்போக்கு மற்றும் காயங்களுக்கு மத்தியிலும் மன உறுதியுடன் போராடிய கேப்டன் சுமித் மச்சர், கட்டுப்பாட்டை மீட்க முயன்றதுடன் அவசர ஆபத்து சிக்னலையும் அனுப்பினார். விமானத்தின் ஆபத்தான அசைவுகளை உணர்ந்து காக்பிட் கதவைத் தட்டிய பயணிகளுக்காக அவர் உள்ளிருந்து கதவைத் திறந்துவிட்டார்.
உடனடியாக உள்ளே நுழைந்த பயணிகள் மற்றும் விடுப்பில் பயணித்த இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் துணை விமானியை மடக்கிப் பிடித்துக் கட்டினர். இதனைத் தொடர்ந்து விமானத்தை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த கேப்டன் மச்சர், அதனைச் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கினார்.
தகவலறிந்ததும் இஸ்ரேல் ராணுவம் நடுவானில் போர் விமானங்களை ஏவிய போதிலும், விமானம் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டதால் அவை திருப்பி அழைக்கப்பட்டன. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், தாக்குதல் நடத்திய துணை விமானியைச் சவுதி பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
இஸ்ரேலியர்களைக் குறிவைத்து விமானத்தை அழிக்க நடத்தப்பட்ட பயங்கரவாத சதி இது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் மொசாத் அமைப்பு தெரிவித்துள்ளன. இக்கட்டான சூழலில் துரிதமாகச் செயல்பட்டு அனைவரின் உயிரையும் காத்த இந்திய கேப்டன் சுமித் மச்சரை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஹீரோ எனப் பாராட்டியுள்ளனர்.