பேய் விரட்ட வீட்டிற்கு வந்த பூசாரிகள் - மனைவியுடன் சேர்த்து கணவர் செய்தி அதிர்ச்சி சம்பவம்! நடந்தது என்ன?
பேய் விரட்டும் சடங்கில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனைவியையும் பூசாரிகளையும் சுட்டுக்கொன்று பொலிஸ் மோதலில் உயிரிழந்த குடும்பத் தலைவர். ஆசாம்கரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
வீட்டில் நிலவி வந்த அமானுஷ்ய அச்சம் காரணமாக பேய் விரட்டும் நோக்கில் பூசாரிகளை வீட்டிற்கு வரவழைத்த மனைவியையும் சடங்கு செய்ய வந்த பூசாரிகளையும் கணவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பொலிஸாருடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் அவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டம் ஷாம்புபூர் கிராமத்தில் வசித்து வந்த அரவிந்த் சிங் என்பவரின் மனைவி பபிதா, தங்களது வீட்டில் கடந்த சில காலமாக அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டம் இருப்பதாக தீவிரமாக நம்பி வந்துள்ளார்.
வீட்டின் அமைதியின்மை மற்றும் தோஷங்களை நீக்கும் பொருட்டு பல்வேறு வழிபாடுகளை முன்னெடுத்து வந்த அவர், இறுதியாக பேய் விரட்டும் சடங்கைச் செய்வதற்காக அயல் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பூசாரிகளைத் தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.
வீட்டிற்கு வருகை தந்த பூசாரிகள் மாந்திரீக வழிபாட்டுச் சடங்குகளைத் தொடங்க முற்பட்ட வேளையில், இதனையறிந்த கணவர் அரவிந்த் சிங்கிற்கும் பூசாரிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்துள்ளது.

வாக்குவாதம் முற்றியதில் கடும் ஆத்திரமடைந்த அரவிந்த் சிங், தன்னிடம் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து பூசாரிகள் இருவரையும், அதற்குத் துணை நின்ற தனது மனைவி பபிதாவையும் சரமாரியாக சுட்டுத் தள்ளியுள்ளார். இதில் குண்டு பாய்ந்த மூவரும் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
வெடிச்சத்தம் கேட்டுப் பதறி ஓடிவந்த அண்டை வீட்டார் முற்றுகையிட முயன்றபோது, அரவிந்த் சிங் தனது பிள்ளைகளுடன் வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டைச் சுற்றி வளைத்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், அவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் ஒரு பிள்ளைக்கு துப்பாக்கிக் காயம் ஏற்பட்ட நிலையில், தற்காப்பிற்காக பொலிஸார் நடத்திய பதில் துப்பாக்கிச் சூட்டில் அரவிந்த் சிங் படுகாயமடைந்தார்.
உடனடியாக மீட்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அரவிந்த் சிங் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.