பிரித்தானிய விசா மோசடி: தமிழர்களை ஏமாற்றி போலி ஆவணங்கள் தயாரித்த இந்திய இளைஞர் கைது
இலங்கை மற்றும் இந்திய தமிழர்களுக்கு போலி விசா பெற்றுத் தருவதாக மோசடி செய்த குற்றச்சாட்டில் பிரித்தானியாவின் பர்மிங்காம் நகரில் 24 வயது இந்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை மற்றும் இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கு போலி ஆவணங்கள் ஊடாக பிரித்தானிய விசாவைப் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடிகளில் ஈடுபட்ட முகவர்களுக்கு எதிராக பிரித்தானிய அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிரித்தானிய அரசாங்கத்தால் புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கடுமையான குடிவரவுச் சட்டத்தின் கீழ், பர்மிங்காம் பகுதியில் வசித்து வந்த 24 வயதான இந்திய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்மெத்விக் பகுதியைச் சேர்ந்த ஜெம்ராஜ் என்ற குறித்த இளைஞரை, பிரித்தானிய தேசிய குற்றத்தடுப்பு முகமை மற்றும் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிஸார் இணைந்து கைது செய்துள்ளனர்.
இவர் போலி விசாக்கள் மற்றும் புகலிடக் கோரிக்கைகள் தொடர்பான சேவைகளை வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து வந்துள்ளார். குடிவரவு அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர கண்காணிப்பு நடவடிக்கையின் போது இவரது சமூக வலைத்தளப் பதிவுகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள நபருக்கு எதிராக Border Security, Asylum and Immigration Act 2025 சட்டத்தின் 17ஆவது பிரிவின் கீழும், 1999ஆம் ஆண்டின் சட்டத்திற்கு முரணாக சட்டவிரோதமான குடிவரவு ஆலோசனைகளை வழங்கிய குற்றத்திற்காகவும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவர் பர்மிங்காம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய குற்றத்தடுப்பு முகமை தெரிவித்துள்ளது. போலி ஆவணங்கள் மற்றும் சட்டவிரோத ஆலோசனைகள் மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைய முற்படுவோரை ஏமாற்றி மோசடி செய்யும் நபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.