ஆணுறுப்பை பெரிதாக்கும் அழகுசாதன சிகிச்சையில் உயிரிழந்த சமூக வலைத்தள பிரபலம்

Published on: 07 Sep 2026, 05:20 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

தாய்லாந்தில் ஆணுறுப்பை பெரிதாக்கும் அழகுசாதன சிகிச்சை மேற்கொண்ட பிரிட்டிஷ் நைஜீரிய தொழிலதிபர் இகோ உபிரிபோ, நுரையீரல் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

ஆணுறுப்பை பெரிதாக்கும் அழகுசாதன சிகிச்சையில் உயிரிழந்த சமூக வலைத்தள பிரபலம்

தாய்லாந்தில் ஆணுறுப்பை பெரிதாக்கும் அழகுசாதன சிகிச்சை மேற்கொண்ட பிரிட்டிஷ் நைஜீரிய தொழிலதிபரும் சமூக வலைத்தள பிரபலமுமான இகோ 'டைனி' உபிரிபோ உயிரிழந்தார். கடந்த மார்ச் மாதம் தாய்லாந்துக்கு மனைவியுடன் சுற்றுலா சென்றிருந்தபோது நடைபெற்ற இச்சம்பவம் குறித்த மருத்துவப் பிரேதப் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

43 வயதான இகோ உபிரிபோ, தாய்லாந்திலுள்ள மருத்துவ மையம் ஒன்றில் ஆணுறுப்பை பெரிதாக்கும் சிகிச்சைக்காக 40 மில்லிலிட்டர் லிடோகைன் மற்றும் ஹைலூரோனிக் அமிலம் ஆகியவற்றை ஊசி மூலம் செலுத்திக்கொண்டார். சிகிச்சைக்குப் பின் பாங்காக்கில் உள்ள மேரியட் ஹோட்டலில் தனது மனைவி டேனியல் சிம்பா ஆலனுடன் தங்கியிருந்தபோது, அவருக்கு மார்பில் வலி ஏற்பட்டு இருமுறை மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் சுகும்விட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சுயநினைவுடன் இருந்த அவருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை பரிந்துரைக்கப்பட்டது. அப்போது அவர் உடலில் ஃபில்லர் ஊசி செலுத்தப்பட்ட விபரத்தை அவரது மனைவி தெரிவித்த நிலையில், உபிரிபோ மீண்டும் சுயநினைவை இழந்தார். அவருக்கு நுரையீரலுக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும் பல்மனரி எம்போலிசம் (Pulmonary Embolism) பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். மார்ச் 6 அதிகாலை மருத்துவர்கள் 100 நிமிடங்களுக்கும் மேலாக சிபிஆர் சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், அவரது நுரையீரலில் காணப்பட்ட செல்கள் அழகுசாதன சிகிச்சையின்போது செலுத்தப்பட்ட ஹைலூரோனிக் அமிலத்துடன் ஒத்துப் போவது உறுதியானது. இதன் மூலம் காஸ்மெடிக் சிகிச்சையினால் ஏற்பட்ட நுரையீரல் ரத்தக்குழாய் அடைப்பே மரணத்திற்குக் காரணம் என மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். ஆடம்பர வாழ்க்கை முறைக்காக இன்ஸ்டாகிராமில் 1.85 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்டிருந்த இகோ உபிரிபோவின் இறுதிச்சடங்கு, லண்டனில் தங்க நிற சவப்பெட்டியுடன் ஆடம்பரமாக நடத்தப்பட்டது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW