"8 மாத குழந்தையை அணைத்தபடி இறந்த தாய்" – இலங்கையில் மண்சரிவில் 23 தமிழர்கள் பலி; காப்பாற்ற வந்த இளைஞர்களும் உயிரிழப்பு

Published on: 30 Nov 2025, 07:42 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

இலங்கையின் கண்டி மாவட்டம், சரசவிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 23 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். 8 மாத குழந்தையை அணைத்தபடி இறந்த தாயின் கதை உள்ளிட்ட துயரச் சம்பவம் பிபிசி தமிழ் மூலம் வெளியானது.

"8 மாத குழந்தையை அணைத்தபடி இறந்த தாய்" – இலங்கையில் மண்சரிவில் 23 தமிழர்கள் பலி; காப்பாற்ற வந்த இளைஞர்களும் உயிரிழப்பு

இலங்கையின் கண்டி மாவட்டத்திலுள்ள சரசவிகம் – ஹதபிம பகுதியில் நவம்பர் 27 இரவு ஏற்பட்ட கடுமையான மழையைத் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டதில் 23 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களில் நான்கு சிறார்களும் அடங்குவர்.

முதலில் ஒரு வீடு மண்சரிவில் அடிபட்டதை அறிந்த பிரதேச இளைஞர்கள் உடனடியாக மீட்பு பணிகளைத் தொடங்கினர். ஆனால், அதே நேரத்தில் மீண்டும் ஒரு பெரிய மண்சரிவு ஏற்பட்டு, காப்பாற்ற வந்த இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் மண்ணுக்குள் புதையுண்டனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒரு தாய், தனது 8 மாத குழந்தையை அரவணைத்தபடி இறந்திருந்தார் என அப்பகுதி மக்கள் பிபிசி தமிழிடம் உருக்கமாகத் தெரிவித்துள்ளனர்.

சரசவிகம் – ஹதபிம பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் 6 குடும்பங்கள் வசித்து வந்தன. மண்சரிவில் உயிரிழந்தவர்கள் இந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் தொடங்கிய மீட்பு முயற்சிகளில் முதல் நாள் 9 உடல்களும், நேற்று (நவம்பர் 29) 5 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 14 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எஞ்சியவர்களின் உடல்கள் இன்னும் காணாமல் உள்ளன.

தேடுதலை முறையாக மேற்கொள்ள ராணுவத்தினர் இன்று அனுப்பப்பட்டு, மாலை முதல் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஆறு ஒன்று ஊடறுத்து செல்வதால், மீட்பு பணிகள் மிகவும் கடினமாக உள்ளன.

மண்சரிவு ஏற்பட்ட முதல் வீட்டின் உரிமையாளரான வி.கே. முத்துகிருஷ்ணன், "என்னுடைய வீட்டுக்கு சற்று மேலே வந்த நேரத்தில், அதற்குக் கீழுள்ள அனைத்து வீடுகளும் மண்ணுக்குள் புதையுண்டன. இறுதி நொடியில்தான் நான் தப்பித்தேன்" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அவர் மேலும், "23 பேர் அந்த இடத்தில் இருந்தனர்; குழந்தைகள் உட்பட பலர் இறந்துவிட்டனர். ஐந்து குடும்பங்கள் அங்கு வாழ்ந்தன. இனி நாங்கள் அந்த இடத்தில் வாழ முடியாது. அரசு எங்களுக்கு நிரந்தர இடம் வழங்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார்.

இறந்தவர்களில் ஒருவரின் மைத்துனியான உஷா, "மழையின்போது பிள்ளைகள் தத்தளிக்கின்றனர் என செய்தி வந்தது. மைத்துனர் உதவிக்குச் சென்று திரும்பவில்லை. அவருடைய உடல் காலையில் கண்டெடுக்கப்பட்டது" என்று கண்ணீருடன் கூறினார்.

மற்றொரு உறவினரான பாக்கியராஜா, "என் அண்ணாவின் மகன், இரண்டு மாதம் திருமணம் ஆனவர். மண்சரிவில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்றவர் மண்ணுக்குள் புதையுண்டார்" என்று துயரத்துடன் தெரிவித்தார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW