வெலிக்கடை சிறைச்சாலையில் சிரந்தி ராஜபக்ஷவுக்கு விசேட பாதுகாப்பு?
10 மில்லியன் ரூபா நிதி முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரந்தி ராஜபக்ஷ வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிரந்தி ராஜபக்ஷ, வெலிக்கடை மெகசின் சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் உள்ள விசேட பாதுகாப்புப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான சேனக்க பல்லேதென்ன இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
அரசுக்குச் சொந்தமான வங்கியில் பெறப்பட்ட 10 மில்லியன் ரூபாவைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் சிரந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டார்.
அவரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அதேநேரம், மருத்துவச் சிகிச்சைக்காக அவரை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சிரந்தி ராஜபக்ஷ நேற்று பிற்பகல் சிறைச்சாலை பேருந்து மூலம் மெகசின் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதன்போது, பேருந்தில் ஏறுவதற்கு உதவ வந்த பெண் பொலிஸ் அதிகாரியின் கைகளை அவர் தட்டிவிட்டு ஏறிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அவருக்குத் தேவையான மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்படும் என சேனக்க பல்லேதென்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதே விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவின் கணவருமான பிரதீப் காரியவசத்தை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதித்துள்ளது.