அவுஸ்திரேலியாவில் 10 பேர் மீது மோதிய கார்: 18 வயது இலங்கை இளைஞன் அதிரடி கைது; பிணை மறுப்பு!
அவுஸ்திரேலியாவின் நியூகாசில் பகுதியில் 10 பேர் மீது கார் மோதிய விபத்தில் இலங்கை வம்சாவளி இளைஞர் இந்திகா பாம்ப்ரிக் சமரசிங்க கைது! நீதிமன்றம் பிணை மறுப்பு; முழு விபரம் இதோ.
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திற்குட்பட்ட நியூகாசில் நகரின் வால்சென்ட் புறநகர்ப் பகுதியில், அதிவேகமாகப் பயணித்த கார் ஒன்று பாதசாரிகள் உட்பட 10 பேர் மீது அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் 18 வயதான இலங்கை வம்சாவளி இளைஞர் ஒருவர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞர் இந்திக சமரசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் மீது பொதுமக்களுக்குப் பலத்த உடல் காயங்களை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான மற்றும் முறையற்ற முறையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விபத்து இடம்பெற்ற இடத்திலேயே கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு பிணை வழங்க நீதவான் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் வாரம் மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.