பட்டதாரிகளுக்கு வெளியானான மகிழ்சியான தகவல்.. உடனடியாக சேவையில் இணைக்கப்படுவர்
ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பு திருத்தங்கள் நிறைவடைந்ததும் B.Ed. பட்டதாரிகள் இலங்கை ஆசிரியர் சேவையில் உடனடியாக இணைக்கப்படுவர் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தப் பணிகள் நிறைவடைந்த பின்னர், கல்வியியல் இளமானி (B.Ed.) பட்டதாரிகளை உடனடியாக இலங்கை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வியியல் இளமானி பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் ஆட்சேர்ப்புச் செய்வதில் நீண்டகாலமாக நிலவிவரும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது தொடர்பாகவும், அதற்காக முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்தும் ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அரச சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்கள் மற்றும் இது தொடர்பில் உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை முழுமையாகக் கருத்திற் கொண்டே ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்புக்கான உத்தேச திருத்தங்கள் தயாரிக்கப்படவுள்ளன.
பிரதமர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது, முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் மற்றும் அவற்றை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் விரிவாக ஆராயப்பட்டதுடன், அவர்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்பட்டன.