சென்னையில் பெண் கொலை: டிராலி பேக்கில் உடல் பாகங்களை ரயிலில் ஏற்றிய தம்பதி மணிப்பூரில் கைது
கூடுவாஞ்சேரியில் பெண்ணைக் கொன்று உடல் பாகங்களை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் அனுப்பிய தம்பதியை மணிப்பூரில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
ஆக்ரா கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தை கடந்த ஆகஸ்ட் 5 அன்று அடைந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து மீட்கப்பட்ட சிவப்பு நிற டிராலி பேக்கில், பெண்ணின் தலை இல்லாத உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பாக ரயில்வே மற்றும் தனிப்படை போலீசார் நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், சென்னை கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதி இந்த டிராலி பேக்கை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குக் கொண்டு வந்தது உறுதியானது. தொடர்ந்து அந்த வீட்டை சோதனையிட்டபோது, அங்கு சமையல் பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த மேலும் சில உடல் பாகங்கள் மீட்கப்பட்டு, இரண்டும் ஒரே பெண்ணுடையது என்பது உறுதி செய்யப்பட்டது.
கொல்லப்பட்டவர் ஒடிசாவைச் சேர்ந்த 38 வயதான ஹயாத்துன் நிஷா என்பதும், கொலையில் ஈடுபட்டவர்கள் அவருடன் ஒரே வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 22 வயதான மாணிக் உத்தீன் லஸ்கர் மற்றும் அவரது 21 வயது மனைவி பகாபதி மாஜி என்பதும் தெரியவந்தது.
தலைமறைவான தம்பதியை செல்போன் சிக்னல்கள் மற்றும் பயண வழித்தடங்கள் மூலம் பின்தொடர்ந்த போலீசார், கடந்த ஆகஸ்ட் 28 அன்று மணிப்பூரில் கைது செய்து நீதிமன்ற அனுமதியுடன் சென்னைக்கு அழைத்து வந்தனர். கூடுவாஞ்சேரி தனிப்படை போலீசார் இருவரையும் 6 நாட்கள் காவலில் எடுத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறை விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணிக் உத்தீனுடன் ஏற்பட்ட பழக்கத்தால் ஹயாத்துன் நிஷா இரண்டு மாத கர்ப்பமான நிலையில், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட தகராறில், கடந்த ஆகஸ்ட் 2 அன்று உணவில் கொடிய விஷம் கலந்து கொடுத்து ஹயாத்துன் நிஷாவை தம்பதி கொலை செய்துள்ளனர். பின்னர் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து உடலைத் துண்டு துண்டாக வெட்டி, சதைப்பகுதியை பிரியாணி அண்டாவில் போட்டு பதினைந்து கிலோ வினிகர் மற்றும் வேதிப்பொருட்களை ஊற்றி காற்றுப் புகாமல் மாவு பூசி மூடி வைத்துள்ளனர்.
எலும்புப் பகுதிகளை பிளாஸ்டிக் பைகளில் சுற்றி டிராலி பேக்கில் அடைத்து, ஆகஸ்ட் 3 இரவு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்றிவிட்டுத் தப்பியுள்ளனர். பின்னர் ஆகஸ்ட் 6 அன்று விமானம் மூலம் அசாம் வழியாக மணிப்பூருக்குத் தப்பிச் சென்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.