ஐபோன், பண ஆசையில் பள்ளி முதல்வரை 27 முறை குத்திக் கொலை செய்த 10ம் வகுப்பு மாணவர்கள் கைது!
நல்கொண்டாவில் தனியார் பள்ளி முதல்வர் ரூபா ரெட்டி 27 முறை குத்திக் கொல்லப்பட்ட வழக்கில், 10-ம் வகுப்பு மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐபோன் மற்றும் பண ஆசையில் பள்ளி முதல்வரைக் கொடூரமாக படுகொலை செய்த 10-ம் வகுப்பு மாணவர்கள் இருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி முதல்வர் ரூபா ரெட்டி, கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி தனது வீட்டில் தனியாக இருந்தபோது 27 முறை குத்திக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் முக்கிய துப்பு, பாதிக்கப்பட்டவர் தனது அத்தையிடம் கடைசியாகப் பேசிய தொலைபேசி உரையாடலில் இருந்து கிடைத்தது. அப்போது அவர் 'பாபு' என்று கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த வார்த்தை மாணவர்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுவதால், விசாரணை பள்ளி மாணவர்கள் மீது திரும்பியது.
கொலைக்குப் பிறகு அந்த இரண்டு மாணவர்களும் திடீரென அதிக பணம் செலவு செய்வதும், நண்பர்களுடன் கொண்டாடுவதுமாக இருந்தது போலீஸாரின் சந்தேகத்தை அதிகரித்தது. இதையடுத்து அவர்கள் புதன்கிழமை காலையில் கைது செய்யப்பட்டனர்.
ஒரு மாணவனிடமிருந்து ரூ.1.51 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ஐபோன் ஒன்று மீட்கப்பட்டது. இந்த பணத்தில் மனித ரத்தக் கறைகள் இருப்பது மேலாய்வில் தெரியவந்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷரத் சந்திர பவார் தெரிவித்தார்.
கொலைக்கு 15 நாட்களுக்கு முன்பு, ஒரு மாணவன் பள்ளி வளாகத்தில் பணத்தையும் செல்போனையும் வைத்திருந்தது முதல்வர் மற்றும் பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர் கண்டிக்கப்பட்டதாகவும், பின்னர் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இதுவே அவனை பழிவாங்கும் எண்ணத்திற்கு தூண்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த நாளில் பள்ளியில் கட்டணம் வசூலிக்கும் நாள் என்பதால், முதல்வரின் வீட்டில் அதிக பணம் இருக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் கொலைத் திட்டத்தை வகுத்துள்ளனர்.
கொலையை முன்னிட்டு ஐந்து நாட்களுக்கு முன்பு திட்டமிடப்பட்ட இந்தச் சம்பவத்தில், மாணவர்கள் கத்தி மற்றும் கையுறைகளை வாங்கியும், சிசிடிவி கேமராக்களை தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளனர்.
ஆகஸ்ட் 11 அன்று, ஒரு மாணவன் சுவர் ஏறி உள்ளே நுழைந்து பணத்தை தேடியபோது, முதல்வர் போனில் பேசிக் கொண்டிருந்தார். அவரை பார்த்ததும் தான் அடையாளம் காணப்பட்டுவிடுவோம் என்ற அச்சத்தில், மாணவன் அவர் மீது கத்தியால் 27 முறை குத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.
பின்னர் சுமார் ரூ.2.5 லட்சம் பணத்துடன் தப்பிய அந்த மாணவன், தான் அணிந்திருந்த ஆடைகளை வடிகாலில் வீசி எறிந்துள்ளான். இரண்டு சிறுவர்களும் கைது செய்யப்பட்டு, Juvenile Justice Board முன் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.