போதிய தூக்கமின்மை மற்றும் கடுமையான மன அழுத்தம்: பரீட்சைக்கு தயாரான 24 வயது இளைஞருக்கு மாரடைப்பு

டெல்லியில் யு.பி.எஸ்.சி பரீட்சைக்கு தயாராகி வந்த 24 வயது இளைஞருக்கு போதிய தூக்கமின்மை மற்றும் மன அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் வைத்தியர்கள் ஸ்டென்ட் பொருத்தி உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.


போதிய தூக்கமின்மை மற்றும் கடுமையான மன அழுத்தம்: பரீட்சைக்கு தயாரான 24 வயது இளைஞருக்கு மாரடைப்பு

இந்தியாவின் டெல்லி நகரில் தங்கியிருந்து ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி) சிவில் சேவைப் பரீட்சைக்கு தயாராகி வந்த 24 வயதுடைய மாணவர் ஒருவர், கடுமையான மாரடைப்புக்கு உள்ளாகி குருக்ராம் பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்றுள்ளார். 

போதிய தூக்கமின்மை, பரீட்சை தொடர்பான தீவிர மன அழுத்தம் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் என்பனவே இந்த இளம் வயதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட பிரதான காரணங்கள் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞருக்கு இரவில் நெஞ்சுப் பகுதியில் இலேசான வலி ஏற்பட்டபோது, அது இரைப்பை அழற்சி அல்லது வாயுத் தொல்லையினால் ஏற்பட்டிருக்கலாம் என கருதி மருந்துகளை உட்கொண்டு உறங்கியுள்ளார். 

எனினும், மறுநாள் காலையிலும் நெஞ்சு வலி தொடர்ந்ததால் வைத்திய பரிசோதனைக்காக அவர் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட வழக்கமான இரத்தப் பரிசோதனை மற்றும் இதய மின் துடிப்பு வரைபடம் (ஈ.சி.ஜி) என்பவற்றின் மூலம் இதயத்தில் தீவிர பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அஞ்சியோகிராம் பரிசோதனையில், அவரது இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் இரண்டு பிரதான நாளங்கள் முழுமையாக அடைபட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

இதனையடுத்து குருக்ராம் போர்டிஸ் ஞாபகார்த்த ஆராய்ச்சி நிலைய வைத்தியசாலையின் இதயவியல் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் சஞ்சய் சிவானே தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவசர அஞ்சியோபிளாஸ்டி சத்திரசிகிச்சையை மேற்கொண்டு அவரது இதய நாளங்களில் ஸ்டென்ட் கருவிகளைப் பொருத்தி உயிரைக் காப்பாற்றியுள்ளனர். 

பொதுவாக 50 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கே ஏற்படக்கூடிய இந்த இரட்டை நாளக் கரோனரி தமனி அடைப்பு நோய், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கமின்மை, நாளாந்தம் 4 முதல் 5 மணித்தியாலங்கள் மாத்திரமே தூங்குதல் மற்றும் அதிக மன அழுத்தம் காரணமாகவே இவ்விளைஞருக்கு மிக இளம் வயதில் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் இவ்வாறான திடீர் மாரடைப்பு அபாயங்களை தவிர்ப்பதற்கு, தொடர்ச்சியான உடற்பயிற்சி, சீரான உணவு முறை, போதிய தூக்கம் மற்றும் புகைப்பிடித்தலை தவிர்ப்பது அவசியமாகும் எனவும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குருதி அமுக்கம் மற்றும் கொலஸ்ட்ரால் பரிசோதனைகளை முன்னெடுக்குமாறும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க