பருவக்கால விடாப்பிடி இருமலைக் கட்டுப்படுத்தும் இயற்கை வீட்டு வைத்தியங்கள்

பருவ மாற்றத்தால் ஏற்படும் விடாப்பிடி இருமல் மற்றும் சளித் தொல்லையைக் கட்டுப்படுத்தும் எளிய இயற்கை வீட்டு வைத்திய முறைகள் மற்றும் மருத்துவரை அணுக வேண்டிய தீவிர அறிகுறிகள்


பருவக்கால விடாப்பிடி இருமலைக் கட்டுப்படுத்தும் இயற்கை வீட்டு வைத்தியங்கள்

வானிலை மாற்றங்கள் காரணமாகப் பரவும் பருவக் காய்ச்சல், தலைவலி மற்றும் சளி போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு, காய்ச்சல் தணிந்த பிறகும் விடாப்பிடி இருமல் நீண்ட நாட்களுக்குத் தொடர்வது பெரும் உபாதையை ஏற்படுத்துகிறது.

இத்தகைய லேசான இருமல் மற்றும் சளிப் பாதிப்புகளுக்குப் பக்கவிளைவுகள் இல்லாத எளிய இயற்கை வைத்திய முறைகள் நல்ல நிவாரணம் அளிப்பதுடன் நோய் எதிர்ப்புச் சக்தியையும் மேம்படுத்துகின்றன.

தொண்டை உறுத்தலைக் குறைப்பதில் சுத்தமான தேன் சிறந்த பலனைத் தருகிறது. இதனை நேரடியாகவோ, வெதுவெதுப்பான நீரிலோ அல்லது மூலிகைத் தேநீரிலோ கலந்து அருந்தலாம்.

அதேபோல், குளிர்ந்த நீரைத் தவிர்த்து மிதமான சூடான காய்கறி சூப், இஞ்சி கலந்த வெதுவெதுப்பான நீர் மற்றும் சர்க்கரை இல்லாத மூலிகை டீ ஆகியவற்றை உட்கொள்வது சளியை இளக்க உதவுகிறது. நெஞ்சுச் சளி அல்லது வரட்டு இருமல் இருக்கும் வேளையில் சுடுநீர் ஆவி பிடிப்பது சுவாசப் பாதையைச் சீராக்கி சளியை இலகுவாக வெளியேற்ற உதவும்.

வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு கலந்து தொண்டையில் படுமாறு வாய் கொப்பளிப்பது வீக்கத்தையும் கிருமித் தொற்றையும் கட்டுப்படுத்தி உடனடி நிம்மதியைத் தரும். தொண்டை எரிச்சலைக் குறைக்கும் வழவழப்பான தன்மையைக் கொண்ட சீமைத்துத்தி எனப்படும் 'மார்ஷ்மெல்லோ ரூட்' மூலிகையின் உலர்ந்த வேரைக் கொண்டு தேனீர் தயாரித்துக் குடிக்கலாம்.

பாரம்பரிய மூலிகையான ஓமவல்லி அல்லது கற்பூரவல்லி இலைகளை நீரில் கொதிக்க வைத்துப் பருகுவதன் மூலம் சுவாசப் பாதை அடைப்புகள் நீங்கி இருமல் தணியும். அமிலத்தன்மை அல்லது நெஞ்செரிச்சல் காரணமாக ஏற்படும் இருமலைத் தவிர்க்க காரம், எண்ணெய் பலகாரங்கள், அமிலத் தன்மை கொண்ட உணவுகள் மற்றும் அதிக தேநீர், காபி உட்கொள்வதைக் குறைக்க வேண்டும்.

அடிக்கடி கைகளைக் கழுவுதல், தொற்று உள்ளவர்களிடம் இருந்து விலகியிருத்தல் மற்றும் போதிய அளவு தண்ணீர் குடிப்பது நோய் பரவலைக் கட்டுப்படுத்த உதவும்.

இருப்பினும், இருமலுடன் மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் சளி வெளியேறுதல், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் 102 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாகக் காய்ச்சல் நீடித்தல், மூச்சுத்திணறல் அல்லது இருமலில் இரத்தம் வருதல் போன்ற தீவிர அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியமாகும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க