தூக்கத்தில் எச்சில் வடிவது தீவிர நோயின் அறிகுறியா: மருத்துவக் காரணங்களும் எச்சரிக்கைகளும்
தூக்கத்தில் தொடர்ந்து எச்சில் வடிவது ஸ்லீப் ஆப்னியா, நரம்புத் தளர்ச்சி அல்லது சுவாசப் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம் என்பதால் மருத்துவப் பரிசோதனை அவசியம் என எச்சரிக்கப்படுகிறது.
தூக்கத்தில் எப்போதாவது உமிழ்நீர் வழிவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், அது தினசரி வழக்கமாக மாறுவது உடலின் முக்கிய ஆரோக்கியக் குறைபாடுகளின் வெளிப்பாடாக அமையலாம் என மருத்துவக் குறிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. சாதாரண சளி அல்லது மூக்கடைப்பு முதல் நரம்பு மண்டலக் கோளாறுகள் வரை பல காரணங்கள் இதன் பின்னணியில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தூக்கத்தில் எச்சில் வடிவதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்றாக 'ஸ்லீப் ஆப்னியா' எனப்படும் தூக்க மூச்சுத்திணறல் கோளாறு அமைகிறது. தூங்கும்போது சுவாசக் குழாய் அடைபடுவதால் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனைப் பெற மக்கள் வாய் வழியே சுவாசிக்க நேரிடுகிறது. இதனால் வாய் திறந்திருக்கும் சூழலில் உமிழ்நீர் வெளியேறுகிறது.
இந்நிலையைக் கவனிக்காமல் விட்டால் இதய நோய், நீரிழிவு மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உண்டு. மேலும், மூக்கின் உட்பகுதி குறுகலாக இருப்பது அல்லது மூக்குத் தடுப்புச்சுவர் வளைந்திருப்பது போன்ற பிரச்சினைகளால் வாய் வழியே சுவாசிப்பவர்களுக்கும் இந்நிலை ஏற்படுகிறது. இத்தகைய சூழலில், சமூக வலைத்தளங்களில் பரவும் வாய் பிளாஸ்டர் (Mouth Tape) ஒட்டும் முறையைப் பின்பற்றுவது உயிருக்கே ஆபத்தாக அமையக்கூடும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
வயிற்றில் சுரக்கும் அமிலம் தொண்டைக்குள் எழும்பும் 'அசிட் ரிஃப்ளக்ஸ்' பாதிப்பு ஏற்படும்போது, தொண்டையைப் பாதுகாக்க உடல் அதிகளவில் உமிழ்நீரைச் சுரப்பதும் இரவில் எச்சில் வடிவதற்கு வழிவகுக்கும். அதேபோல் பருவகால அலர்ஜி, சைனஸ், சளி, தொண்டை சதை வீக்கம், பற்கள் மற்றும் தாடை அமைப்பில் ஏற்படும் குறைபாடுகளும் உமிழ்நீர் வெளியேறக் காரணமாகின்றன.
மேலும், பார்க்கின்சன் போன்ற நரம்பு மண்டலப் பாதிப்புகள் உள்ளவர்களுக்கு விழுங்கும் தசை நார்களின் செயல்பாடு குறைவதால் உமிழ்நீரைச் சீராக விழுங்க முடியாமல் தூக்கத்தில் எச்சில் வடியக்கூடும். இது சில நேரங்களில் சுவாசக் குழாய்க்குள் சென்று நுரையீரலையும் பாதிக்கலாம்.
தொடர்ச்சியாக எச்சில் வடிவதோடு காலையில் தலைவலி, பகலில் அதீத சோர்வு, அதிக கொட்டாவி மற்றும் கடுமையான குறட்டை போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக காது, மூக்கு, தொண்டை (ENT) மருத்துவரை அணுகுவது அவசியமாகும். முறையான தூக்கப் பரிசோதனை (Sleep Study) மேற்கொள்வதன் மூலம் பிரச்சினையின் தீவிரத்தை அறிந்து தகுந்த சிகிச்சைகளைப் பெற முடியும்.