நோயெதிர்ப்பு சக்தியை இரட்டிப்பாக்க: நெல்லிக்காயுடன் சேர்த்து சாப்பிட வேண்டிய 5 பொருட்கள்
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன, தேன், மஞ்சள், இஞ்சி, எலுமிச்சை, துளசி ஆகியவற்றுடன் சேர்த்து உட்கொள்ளும் 5 வழிகளை இந்த பதிவு விளக்குகிறது.
தமிழ்நாட்டில் டெங்கு மற்றும் ப்ளூ காய்ச்சல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் உண்ணும் சில உணவுகள் பெரிதும் உதவி புரிகின்றன, அவற்றில் ஒன்று நெல்லிக்காய். நெல்லிக்காயில் வைட்டமின் சி, பாலிஃபீனால்கள், ப்ளேவோனாய்டுகள் மற்றும் டானின்கள் போன்றவை அதிகளவில் நிறைந்துள்ளன.
நெல்லிக்காயில் உள்ள அதிகளவு வைட்டமின் சி மற்றும் பாலிஃபீனால்கள் இரத்த வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகின்றன. அதேபோல் நெல்லிக்காயில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகின்றன, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கின்றன மற்றும் முன்கூட்டிய வயது, வீக்கம் மற்றும் நாள்பட்ட நோயிலிருந்து செல்களைப் பாதுகாக்கின்றன.
இப்படிப்பட்ட நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிடுவது உடலில் பல நன்மைகளைப் புரியும், குறிப்பாக இதைக் குறிப்பிட்ட சில உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ளும்போது நோயெதிர்ப்பு சக்தி இரட்டிப்பாக அதிகரிக்கும்.
முதலாவதாக, நெல்லிக்காயுடன் தேன் சேர்த்து சாப்பிடுவது சுவையாக இருப்பதோடு நோயெதிர்ப்பு சக்தியையும் இரட்டிப்பாக அதிகரிக்கும். நெல்லிக்காய் உடலின் இயற்கையான பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த உதவுகிறது, தேன் தொண்டைப்புண்ணை ஆற்றுகிறது, குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது மற்றும் விரைவான ஆற்றலை வழங்குகிறது. ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி அல்லது நெல்லிக்காய் ஜூஸுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எடுக்க வேண்டும்.
இரண்டாவதாக, மஞ்சள் மற்றும் நெல்லிக்காய் கலவை நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த பெரிதும் உதவுகிறது. நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம், மஞ்சளில் குர்குமின் ஏராளமான அளவில் உள்ளது. இவ்விரண்டும் ஒன்றாகக் கிடைக்கும்போது நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடையும், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும், இரத்த வெள்ளையணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கும். வெதுவெதுப்பான நீருடன் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி அல்லது எலுமிச்சைச் சாறு சேர்த்து, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து காலையில் எழுந்ததும் உட்கொள்ள வேண்டும்.
மூன்றாவதாக, இஞ்சி மற்றும் நெல்லிக்காய் கலவை நோயெதிர்ப்பு சக்தியைத் திறம்பட மேம்படுத்தும். வெதுவெதுப்பான நீரில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் அரை டீஸ்பூன் துருவிய இஞ்சியைச் சேர்த்துக் கலந்து, சுவைக்கேற்ப தேன் கலந்து காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், அவற்றில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, நோய்த்தொற்றுகளை அழித்து, உடலின் இயற்கையான பாதுகாப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
நான்காவதாக, நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை இரண்டிலுமே வைட்டமின் சி வளமான அளவில் உள்ளது. இவ்விரண்டையும் ஒன்றாக எடுக்கும்போது தொற்றுகளை எதிர்க்கவும், உடலில் நச்சுக்களை அகற்றவும், சருமப் பொலிவை மேம்படுத்தவும் உதவுகிறது.
இவற்றில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் இரத்த வெள்ளையணுக்களை வலுப்படுத்தி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன. வெதுவெதுப்பான நீரில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் சாறு மற்றும் பாதி எலுமிச்சைச் சாற்றினைக் கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
ஐந்தாவதாக, துளசி மற்றும் நெல்லிக்காய் இரண்டுமே ஆயுர்வேதத்தில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. துளசி ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல் மற்றும் உடலின் சமநிலையைப் பேணும் தன்மைக்குப் பெயர் பெற்றது, நெல்லிக்காய் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளைக் கொண்டது.
இவ்விரண்டும் நோய்த்தொற்றுகள், மன அழுத்தம் மற்றும் சுவாச ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்கின்றன. சிறிது துளசி இலைகளைக் கொதிக்கும் நீரில் போட்டுச் சில நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி, ஒரு டம்ளரில் வடிகட்டி ஊற்றி, ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி மற்றும் சுவைக்கேற்ப தேன் சேர்த்துக் கலந்து டீ போன்று குடிக்க வேண்டும்.
இந்த ஐந்து கலவைகளையும் மாறி மாறிப் பயன்படுத்துவதன் மூலம், நோயெதிர்ப்பு சக்தியை இயற்கையாக அதிகரிக்க முடியும். எனினும், இவை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றல்ல என்பதை நினைவில் கொண்டு, தொடர் அல்லது தீவிரமான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.