சிகரெட் நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய எவ்வளவு காலம் ஆகும்? நுரையீரல் நிபுணர் விளக்கம்

நுரையீரல் நிபுணர் டாக்டர் சுரேஷ் சகாதேவன், சிகரெட் நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய எவ்வளவு காலம் ஆகும் என்பதையும், புகைப்பிடிப்பதை நிறுத்துவதன் நன்மைகளையும், சிலியா மீட்பு மற்றும் நிகோட்டின் சிகிச்சை குறித்தும் விளக்கியுள்ளார்.


சிகரெட் நிறுத்திய பிறகு நுரையீரல் சுத்தமடைய எவ்வளவு காலம் ஆகும்? நுரையீரல் நிபுணர் விளக்கம்

நாம் உயிர்வாழ நுரையீரல் மிகவும் இன்றியமையாதவை. இந்த நுரையீரலின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சுவாச நோய்களின் சுமையைக் குறைப்பதன் அவசரத் தேவையை உணர்த்துவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இருபத்தைந்தாம் தேதி உலக நுரையீரல் தினம் அனுசரிக்கப்படுகிறது.

நுரையீரல்தான் ஒவ்வொரு மூச்சின் போதும் உடலுக்குப் புத்துணர்ச்சியான ஆக்ஸிஜனை வழங்கி, கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றுகின்றன. ஆனால் இந்த நுரையீரலின் ஆரோக்கியத்தைச் சேதப்படுத்தும் வகையில் ஒரு மோசமான பழக்கம் மக்களிடையே உள்ளது, அது தான் புகைப்பிடிப்பது.

புகைப்பிடிக்கும் போது ஆயிரக்கணக்கான நச்சு கெமிக்கல்கள் மற்றும் தார் சுவாச மண்டலத்திற்குள் நுழைந்து, சுவாச பாதைகளைச் சேதப்படுத்துவதோடு நுரையீரல் திசுக்களையும் அழிக்கத் தொடங்குகிறது. தற்போது புகைப்பிடிப்போர் பலரும் அதன் மோசமான விளைவுகளை அறிந்து அப்பழக்கத்தைக் கைவிட முயற்சிக்கின்றனர், மேலும் சிகரெட் பழக்கத்தைக் கைவிட்டால் நுரையீரலில் ஏற்பட்ட சேதங்கள் சரியாகிவிடுமா, எவ்வளவு காலம் ஆகும் என்பன போன்ற கேள்விகளும் எழுகின்றன. இந்தக் கேள்விகளுக்கு விடை காண, சென்னை க்ளெனீகிள்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் நிபுணரான டாக்டர் சுரேஷ் சகாதேவன் விளக்கியுள்ளார்.

அவர் கூறியதாவது: "சிகரெட் புகை காற்றில் மறைந்துவிட்டால், அது நம் உடலையும் விட்டு வெளியேறிவிட்டது என்று நாம் அடிக்கடி நினைக்கிறோம். ஆனால், நான் எனது நோயாளிகளிடம் அடிக்கடி சொல்வது ஒன்று தான். சில நொடிகளில் மறைந்துவிடும் புகை, நுரையீரலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் நீண்ட காலம் நீடிக்கக்கூடும். நீங்கள் சிகரெட்டைப் புகைக்கும் போது, புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பல வேதிப்பொருட்கள் உட்பட ஆயிரக்கணக்கான இரசாயனங்களுக்கு உங்கள் உடல் ஆளாகிறது, இதன் பாதிப்புகள் நுரையீரலில் உடனடியாகத் தொடங்குகின்றன. புகையிலையில் உள்ள நுண்ணிய துகள்கள் மற்றும் பிற வேதிப்பொருட்கள் சுவாசக் குழாய்களில் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. சளி உற்பத்தியை அதிகரிப்பதுடன், நுரையீரலில் உள்ள சளி மற்றும் தூசித் துகள்களை வெளியேற்ற உதவும் மிக நுண்ணிய முடி போன்ற அமைப்புகளான சிலியாவின் செயல்பாட்டையும் பாதிக்கின்றன. இதன் காரணமாகவே இளம் வயதிலேயே புகைப்பிடிப்பவர்களுக்குத் தொடர்ந்து இருமல், தொண்டை எரிச்சல் மற்றும் அதிகப்படியான சளி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன."

புகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகு நுரையீரல் மீள எவ்வளவு காலம் ஆகும் என்பதற்கு அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரே கால அளவு கிடையாது. ஒருவர் எத்தனை ஆண்டுகளாகப் புகைப்பிடிக்கிறார், தினமும் எத்தனை சிகரெட்டுகள் புகைக்கிறார், ஏற்கனவே நுரையீரலில் பாதிப்பு உள்ளதா என்பதையெல்லாம் பொறுத்து குணமடையும் காலம் மாறுபடும். கடைசி சிகரெட்டைப் புகைத்த உடனேயே உடலில் சில மாற்றங்கள் சீராகத் தொடங்குகின்றன, ஆனால் சுவாசக் குழாய்களும் சிலியா எனப்படும் நுண்ணிய அமைப்புகளும் முழுமையாக மீள்வதற்கு அதிக காலம் தேவைப்படுகிறது. புகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகு இரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்சைடு அளவு குறையத் தொடங்குகிறது, நிகோட்டினும் ஒப்பீட்டளவில் விரைவாக உடலை விட்டு வெளியேறுகிறது. இருப்பினும், தொடர்ந்து புகையைச் சுவாசிப்பதால் ஏற்பட்ட வீக்கமும் எரிச்சலும் உடனடியாக மறைந்துவிடுவதில்லை. நுரையீரல் தனது இயல்பான சுத்திகரிப்பு செயல்பாட்டை மீட்டெடுக்கவும், சளி உற்பத்தியைக் குறைக்கவும், தொடர்ந்து ஏற்பட்ட எரிச்சலில் இருந்து மீளவும் கால அவகாசம் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்குக் குறைவான எண்ணிக்கையில் சிகரெட் புகைப்பவர்களுக்குக்கூடச் சுவாசக் குழாய்களில் வீக்கமும் நுரையீரல் செயல்பாட்டில் அளவிடக்கூடிய மாற்றங்களும் ஏற்படலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, சிகரெட்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்பதற்காகக் குறைவாகவோ எப்போதாவது மட்டுமோ புகைப்பிடிப்பது பாதிப்பில்லாதது என்று நான் கருதவில்லை.

இளம் வயதிலேயே நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது தொடர்பாக, ஒப்பீட்டளவில் இளம் வயதிலேயே சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்படும் பல நோயாளிகளைத் தான் சந்திப்பதாக டாக்டர் கூறுகிறார். காலையில் எழுந்தவுடன் இருமல், உடற்பயிற்சி செய்யும் போது விரைவில் மூச்சு வாங்குதல், மூச்சு விடும்போது விசில் போன்ற சத்தம் அல்லது அடிக்கடி சுவாசத் தொற்றுகள் ஏற்படும் போதுதான் புகைப்பிடிப்பது நுரையீரலைப் பாதிக்கிறது என்பதைப் பலர் உணர்கிறார்கள். ஆனால் அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதற்காக நுரையீரலில் பாதிப்பு இல்லை என்று அர்த்தமல்ல.

நம்பிக்கையளிக்கும் விஷயம் என்னவென்றால், புகைப்பிடிப்பதை நிறுத்திய பிறகு நுரையீரலுக்கு ஓரளவு மீண்டு வரும் திறன் உள்ளது. புகைப்பிடிப்பதை நிறுத்திய குறுகிய காலத்திலேயே உடலில் உள்ள கார்பன் மோனாக்சைடு வெளியேறத் தொடங்குகிறது, புகைப்பிடிப்பதால் ஏற்பட்ட பிற பாதிப்புகளும் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கின்றன. அடுத்த சில வாரங்கள் மற்றும் மாதங்களில் இருமலும் மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமங்களும் குறையலாம், சுவாசக் குழாய்களில் உள்ள சிலியா மீண்டும் சளி மற்றும் நுண்ணிய துகள்களை வெளியேற்றும் திறனைப் படிப்படியாகப் பெறுகின்றன. ஒருவர் எவ்வளவு நீண்ட காலம் புகைப்பிடிக்காமல் இருக்கிறாரோ, அவ்வளவு அதிகமான ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும்.

உலக நுரையீரல் தினத்தில் வலியுறுத்த விரும்புவது, மூச்சுத் திணறல் அல்லது நுரையீரல் பிரச்சினை ஏற்படும் வரை காத்திருக்க வேண்டாம் என்பதே. ஒவ்வொரு சிகரெட்டும் சுவாசக் குழாய்களைப் பாதிக்கக்கூடிய வேதிப்பொருட்களை நுரையீரலுக்குள் கொண்டு செல்கிறது, இது நாள்பட்ட சுவாச நோய்கள் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. பல ஆண்டுகளாகப் புகைப்பிடித்து வந்தவர்களுக்குக் கூட அதை நிறுத்துவதால் நன்மைகள் கிடைக்கும். புகைப்பிடிப்பதை நிறுத்த முயற்சி செய்கிறீர்கள் என்றால், மன உறுதியை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை, முறையான அணுகுமுறை இந்தப் பயணத்தை எளிதாக்கும். புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கான ஒரு தேதியைத் தீர்மானியுங்கள், காலையில் தேநீர் அருந்துவது, வேலை இடைவேளைகள் அல்லது மது அருந்துவது போன்ற புகைப்பிடிக்கத் தூண்டும் சூழல்களைக் கண்டறியுங்கள், உங்களுக்குப் பொருத்தமான சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுங்கள். நிகோட்டின் சார்பு உள்ளவர்களுக்கு நிகோட்டின் மாற்றுச் சிகிச்சை மற்றும் ஆலோசனை போன்றவை மருத்துவக் கண்காணிப்புடன் மேற்கொள்ளப்படும் புகைப்பிடிப்பதை நிறுத்தும் திட்டத்தின் பயனுள்ள பகுதிகளாக இருக்கலாம்.

மொத்தத்தில், புகை சில நொடிகளில் மறைந்துவிடலாம், ஆனால் நுரையீரல் மீண்டு வருவதற்கு அதிக காலம் தேவைப்படுகிறது. நீங்கள் எவ்வளவு விரைவாகப் புகைப்பிடிப்பதை நிறுத்துகிறீர்களோ, அவ்வளவு அதிகமான வாய்ப்பை உங்கள் நுரையீரல் குணமடைவதற்கும், எதிர்காலத்தில் உங்கள் சுவாச ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் வழங்குகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க