இரவில் திடீர் விழிப்பு ஏற்படுகின்றதா... விடிய விடிய தூக்கம் இல்லாமல் தவிக்கின்றீர்களா? என்ன காரணம் தெரியுமா?
இரவில் திடீரென விழிப்பு வருவதற்கான காரணங்கள் மற்றும் ரத்த சர்க்கரை அளவைச் சீராக்கி ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும் இயற்கை வழிமுறைகள் குறித்து நிபுணர்கள் விளக்கம்.
இரவில் மூன்று மணி முதல் ஐந்து மணி வரையிலான நேரத்தில் திடீரென விழிப்பு வந்து மீண்டும் தூங்குவதில் சிரமம் ஏற்படுவதற்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரெனக் குறைவதே பிரதான காரணம் என ஆரோக்கிய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இரவு நேரத்தில் மூளை தன்னைத்தானே சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு குளுக்கோஸ் அவசியமாகிறது. அப்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் போது, ஆற்றலை உருவாக்க உடலானது கார்ட்டிசால் மற்றும் அட்ரினலின் ஆகிய ஹார்மோன்களைச் சுரக்கிறது. இந்த ஹார்மோன்களின் திடீர் சுரப்பே நடுநிசியில் விழிப்பு வரக் காரணமாக அமைகிறது.
இந்த நிலையைச் சரிசெய்ய உறங்குவதற்கு முன் தேன், கொலாஜன் மற்றும் எம்.சி.டி எண்ணெய் கலந்த கலவையைச் சிறிதளவு உட்கொள்ளலாம் என்று பயோஹேக்கிங் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தூய்மையான தேன் மூளைக்குத் தேவையான குளுக்கோஸை வழங்கி கார்ட்டிசால் சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது; எம்.சி.டி எண்ணெய் உடனடி ஆற்றலை அளிக்கிறது; கொலாஜனில் உள்ள கிளைசின் அமினோ அமிலம் உடலைக் குளிர்வித்து ஆழ்ந்த தூக்கத்தைத் தூண்டுகிறது. இந்த இயற்கை உணவு முறை ரத்த சர்க்கரை அளவைச் சீராகப் பராமரித்துத் தூக்கமின்மை சிக்கலைத் தணிக்க உதவுகிறது.
இருப்பினும் இந்த முறையானது அனைவருக்கும் பொதுவான பலனைத் தருமா என்பதில் மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், ரத்த சர்க்கரை அளவில் தீவிர மாறுபாடு கொண்டவர்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இத்தகைய உணவுகளை எடுத்துக்கொள்வதற்கு முன்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுவது கட்டாயமாகும்.
மேலும் இக்கலவையை மிகக் குறைந்த அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும் எனவும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.