மாணவி கடத்தல் மற்றும் பாலியல் வன்புணர்வு வழக்கு: உப பொலிஸ் பரிசோதகருக்கு 50 ஆண்டுகள் கடூழியச் சிறை
பாடசாலை மாணவியொருவரைக் கடத்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய வழக்கில் உப பொலிஸ் பரிசோதகருக்கு 50 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனையை 15 ஆண்டுகளில் ஏககாலத்தில் அனுபவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாடசாலை மாணவியொருவரைக் கடத்தி, பாரதூரமான பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு குருநாகல் மேல் நீதிமன்றம் 50 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பிரதிவாதிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதையடுத்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வடமேல் மாகாண முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியும், தற்போது கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றுபவருமான லால் ரணசிங்க பண்டார இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
நான்கு குற்றச்சாட்டுகளுக்குமாக மொத்தம் 50 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதிலும், குறித்த தண்டனைகளை 15 ஆண்டுகளில் ஏககாலத்தில் அனுபவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு வழங்குமாறும் குற்றவாளிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த நட்டஈட்டுத் தொகையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில், மேலதிகமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, நிரூபிக்கப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளுக்கும் தலா 50,000 ரூபாய் வீதம் மொத்தமாக இரண்டு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.