திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.207 கோடியில் 121 கிலோ தங்க நகைகளை காணிக்கையாக வழங்கிய சென்னை தம்பதி
சென்னையைச் சேர்ந்த வர்தமான் - ராதிகா ஜெயின் தம்பதியினர், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.207 கோடி மதிப்பில் 121 கிலோ தங்க நகைகளைக் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு, சென்னையைச் சேர்ந்த ஜெயின் தம்பதியினரான வர்தமான் மற்றும் ராதிகா ஜெயின் தம்பதியினர் 121 கிலோ எடையுள்ள தங்க நகைகளைக் காணிக்கையாக வழங்கியுள்ளனர். ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் இந்த ஆபரணங்கள் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன.
சுமார் ரூ.206 முதல் ரூ.207 கோடி மதிப்பிலான, வைரங்கள் பதிக்கப்பட்ட 46 வகையான தங்க நகைகள் இதில் இடம்பெற்றுள்ளன. ஏழுமலையானைத் தலை முதல் பாதம் வரை அலங்கரிக்கக்கூடிய கிரீடம், பாதம், இடுப்புப் பட்டை, தோள்பட்டை, சங்கு, சக்கரம் உள்ளிட்ட விலையுயர்ந்த நகைகள் இவற்றுள் அடங்கும்.
இந்த நகைகளில் 238.2 காரட் எடையுள்ள வைரங்களும், 2,247.7 காரட் விலைமதிப்பற்ற கற்களும், 91.6 காரட் நீல நிற சபையர் கற்களும், 84.2 காரட் மஞ்சள் நிற சபையர் கற்களும், 2,916.5 கிராம் மாணிக்கம் மற்றும் மரகதக் கற்கள் மற்றும் சாளக்கிராமக் கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. திருப்பதி கோயிலுக்கு அண்மைக் காலங்களில் வழங்கப்பட்ட மிகப்பெரிய நன்கொடைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஏழுமலையான் மீதான ஆழ்ந்த பக்தியின் வெளிப்பாடாக இந்தக் காணிக்கை அமைந்துள்ளதாகத் தெரிவித்து தம்பதியினருக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், கடந்த காலத்தில் அலிபிரியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் இருந்து வெங்கடேஸ்வரப் பெருமான் தனக்கு மறுவாழ்வு அளித்ததை அவர் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்ததுடன், வசதி படைத்தவர்கள் இதுபோன்று ஆன்மீகம் மற்றும் சமூக நலனுக்காக உதவ முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
யார் இந்த வர்தமான்?
சென்னையைச் சேர்ந்த வர்தமான், பிரபல ஹெல்த்கேர் தொழில்நுட்ப நிறுவனமான 'Access Healthcare'-ன் இணை நிறுவனராகப் பணிபுரிந்து வருவதுடன், தொழில் துறையில் முத்திரை பதித்துள்ளார். அதுமட்டுமின்றி, சென்னை காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலராகவும் பொறுப்பு வகித்து, பல சமூக நலப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.