பொது ஒழுக்கத்திற்கு எதிரான உள்ளடக்கத்தைத் தயாரித்து வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஈரானியப் பாடகி பராஸ்டூ அஹ்மதி மற்றும் அவரது தயாரிப்புக் குழுவைச் சேர்ந்த நான்கு பேருக்கு தலா 74 கசையடிகள் வழங்கும் தண்டனையை ஈரானிய அதிகாரிகள் நிறைவேற்றியுள்ளனர்.
மேலும், இவர்களுக்கு எதிர்காலத்தில் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, வெளிநாட்டுப் பயணக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் முஸ்தபா நிலி உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இணையத்தில் வெளியிடப்பட்ட இசை வீடியோ ஒன்றில், கட்டாய ஹிஜாப் அணியாமல் ஆண் இசைக்கலைஞர்களுடன் இணைந்து பராஸ்டூ அஹ்மதி பாடியதே இந்த வழக்கிற்கான முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. பொது இடங்களில் பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற ஈரானியச் சட்டத்தை மீறியதாகக் கூறி இந்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் கசையடி போன்ற தண்டனைகளைக் கொடூரமான சித்திரவதை எனக் தொடர்ந்து கண்டித்து வரும் போதிலும், ஈரான் அந்த அனைத்து விமர்சனங்களையும் நிராகரித்து தனது சட்டதிட்டங்களை இறுக்கமாக நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.