திருமணமான பெண்ணை மணக்க விரும்பிய மகன் கொலை: கர்நாடகாவில் தாய் கைது
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் திருமணமான பெண்ணொருவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிய 21 வயதுடைய மகனைக் கொலை செய்ததாக அவரது தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் திருமணமான பெண்ணொருவருடன் உறவில் இருந்த தனது மகனைக் கொலை செய்ததாக 47 வயதுடைய தாய் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் துமகூரு பிரதேசத்திலுள்ள ஜக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த 51 வயதுடைய புட்டையா மற்றும் 47 வயதுடைய சிவம்மா தம்பதியினரின் மகனான 21 வயதுடைய முத்துராஜ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பெங்களூருவில் பணிபுரிந்து வந்த முத்துராஜ், சம்பவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தனது சொந்தக் கிராமத்திற்குத் திரும்பியிருந்தார்.
சம்பவத்தன்று இரவு உணவை உட்கொண்ட பின்னர், வீட்டிற்கு வெளியே பாய் ஒன்றை விரித்து அவர் உறங்கியுள்ளார்.
மறுநாள் காலை தலையில் பலத்த காயங்களுடன் முத்துராஜ் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அவரது குடும்பத்தினர் கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விசாரணைகளின்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த வேறொரு சாதியைச் சேர்ந்த திருமணமான பெண்ணொருவருடன் முத்துராஜ் உறவில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. குறித்த பெண் இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.
குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி குறித்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முத்துராஜ் விரும்பியதாகக் கூறப்படுகின்றது.
இது தொடர்பில் அவரது தாயான சிவம்மா மகனை எச்சரித்திருந்த போதிலும், அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், உறங்கிக்கொண்டிருந்த முத்துராஜின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கி சிவம்மா அவரைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கெமரா (CCTV) பதிவுகளின் அடிப்படையில் சம்பவம் தொடர்பான ஆதாரங்களைக் கண்டறிந்த பொலிஸார், சிவம்மாவைக் கைது செய்துள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத் தீர்ப்பு எதுவும் வழங்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தியில் குறிப்பிடப்படவில்லை.