காதல் முறிவைத் தொடர்ந்து இளம்பெண்ணை விடுதிக்கு அழைத்து சென்று மோசமாக நடந்த காதலன்: விடுதிக்கு வெளியிலும் நடந்த சம்பவம்!
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் காதல் முறிவைத் தொடர்ந்து 24 வயதுடைய இளம்பெண்ணை விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்று தாக்கியதாக இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள மீரட் நகரில், காதல் உறவு முறிவடைந்ததைத் தொடர்ந்து 24 வயதுடைய இளம்பெண்ணை அவரது முன்னாள் காதலன் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காசியாபாத் பகுதியைச் சேர்ந்த குறித்த இளம்பெண், சுமார் இரண்டரை ஆண்டுகளாக இளைஞரொருவருடன் காதல் உறவில் இருந்துள்ளார். அண்மையில் இருவருக்கும் இடையிலான உறவு முறிவடைந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், இறுதியாக ஒருமுறை சந்தித்துப் பேச வேண்டும் எனக் கூறி, மீரட் நகரின் அபு லேன் பகுதியிலுள்ள விடுதியொன்றுக்கு குறித்த இளம்பெண்ணை அவரது முன்னாள் காதலன் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, இளம்பெண் தாக்குதலுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அவர் வேறு எவரிடமும் உதவி கோருவதைத் தடுக்கும் வகையில் அவரது கையடக்கத் தொலைபேசியையும் குறித்த இளைஞர் பறித்துக்கொண்டதாகக் கூறப்படுகின்றது.
தாக்குதலிலிருந்து தப்பிய இளம்பெண் விடுதி அறையிலிருந்து வெளியேறி வீதிக்கு வந்துள்ளார். எனினும், அவரைப் பின்தொடர்ந்து வந்த இளைஞர், வீதியில் வைத்து மீண்டும் தாக்கியதுடன் அவரை விடுதிக்குள் அழைத்துச் செல்லவும் முயன்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இளம்பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்ட அப்பகுதி வர்த்தகர்களும் பொதுமக்களும் உடனடியாகத் தலையிட்டு தாக்குதலைத் தடுத்துள்ளனர்.
பொதுமக்கள் திரண்டதைத் தொடர்ந்து, குறித்த இளைஞர் விடுதியின் மேல் மாடிக்குச் சென்று, அருகிலிருந்த கட்டடத்தின் ஊடாகத் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்து அங்கு சென்ற பொலிஸார், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மீட்டு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இளம்பெண் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், சல்மான் என்ற இளைஞருக்கு எதிராகப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.