கள்ளக்காதல் விவகாரத்தை வெளியே சொல்லிய 10ஆம் வகுப்பு மாணவன் விஷம் வைத்துக் கொலை
தெலுங்கானாவில் கள்ளக்காதல் விவகாரத்தை வெளியே சொல்லிவிடுவேன் என மிரட்டிய 10ஆம் வகுப்பு மாணவனுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற 19 வயதுப் பெண்ணும் சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்காதல் ஜோடியின் தகாத உறவைப் பார்த்துக் குடும்பத்தினரிடம் கூறிவிடுவதாக மிரட்டிய 10ஆம் வகுப்பு மாணவனுக்குக் களைக்கொல்லி மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்துக் கொலை செய்த 19 வயதுப் பெண்ணையும் 14 வயதுச் சிறுவனையும் தெலுங்கானா மாநிலப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரைப் பிரிந்து கடந்த ஆறு மாதங்களாகப் பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். அந்த வேளையில், அதே பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவனுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளாந்தம் ஏற்பட்ட இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதைத் தொடர்ந்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த பெண்ணும் சிறுவனும் தகாத முறையில் இருப்பதை உயிரிழந்த 10ஆம் வகுப்பு மாணவனான ரவி நேரில் பார்த்துள்ளார். மேலும், இதுகுறித்து இருவரது குடும்பத்தினரிடமும் தெரிவித்துவிடுவேன் என அவர் எச்சரித்துள்ளார். இதனால் தங்களது கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்துவிடும் என அஞ்சிய இருவரும், அந்த மாணவனைப் பழிவாங்கத் திட்டமிட்டுள்ளனர்.
அதன்படி, மாணவனை நடமாட்டம் இல்லாத ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்ற அவர்கள், களைக்கொல்லி மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், தீவிர விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட பெண்ணையும் 14 வயதுச் சிறுவனையும் கைது செய்தனர். கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் பள்ளி மாணவனுக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.