மகளுடன் ஒரே அறையில் இருந்த காதலன்... தொழிலதிபர் செய்த காரியம்... அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்!
பெங்களூரில் தனது 19 வயது மகளுடன் பழகிய 22 வயது ஊழியரை கிரிக்கெட் மட்டையால் தாக்கிக் கொன்றதாகத் தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர்.
இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரில், தனது மகளுடன் காதல் உறவில் இருந்ததாகக் கூறப்படும் 22 வயது இளைஞரைத் தாக்கிக் கொலை செய்த குற்றச்சாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரின் எலகங்கா பகுதியில் நவம்பர் 2ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த கிரண் (22) என்பவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக தொழிலதிபரான ஆனந்த் (45) என்பவரைக் கைது செய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த ஆனந்த், பெங்களூரின் எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவர் இனிப்புச் சோளம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவரது நிறுவனத்தில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த கிரண், தனது சகோதரருடன் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனந்தின் 19 வயது மகள் மைசூரிலுள்ள கல்லூரி ஒன்றில் கல்வி கற்று வந்துள்ளார். விடுமுறை நாட்களில் பெங்களூரிலுள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது.
அவ்வாறு வீட்டிற்கு வந்திருந்த சந்தர்ப்பங்களில் கிரணுக்கும் குறித்த இளம்பெண்ணுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் அது நெருக்கமான உறவாக மாறியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கிரணுக்கும் தனது மகளுக்கும் இடையிலான உறவு குறித்து ஆனந்த் அறிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இருவரும் திருமணம் செய்துகொள்ளக்கூடும் என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டிருந்ததாகவும், இந்த உறவுக்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் ஆரம்பகட்டத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந்தப் பின்னணியில், நவம்பர் 2ஆம் திகதி ஆனந்தின் மகள் வீட்டில் இருந்தபோது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தன்று ஆனந்த், தனது மனைவியுடன் தமிழ்நாட்டிற்குச் சென்று வருவதாக மகளிடம் தெரிவித்துவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும், சில மணிநேரங்களுக்குப் பின்னர் அவர் மீண்டும் வீட்டிற்குத் திரும்பியுள்ளார்.
அப்போது தனது மகளுடன் கிரண் தனி அறையில் இருந்ததைக் கண்ட ஆனந்த் ஆத்திரமடைந்து அவரைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தனது மகளை சிக்கபள்ளாப்பூரிலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு அனுப்பிவைத்ததாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
மகளை வீட்டிலிருந்து அனுப்பிய பின்னர் கிரண் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கிரிக்கெட் மட்டை மற்றும் குழாய் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தி அவரது மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலில் பலத்த காயமடைந்த கிரண், பின்னர் மயக்கமடைந்துள்ளார்.
இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக முச்சக்கரவண்டி ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும், மருத்துவமனையில் கிரணைப் பரிசோதித்த வைத்தியர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.
கிரணின் மரணம் தொடர்பாக ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.