மோசடி புகாரில் தேனிலவுக்குச் சென்ற பிக் பாஸ் பிரபலம் மும்பை விமான நிலையத்தில் கைது!

Published on: 05 Jan 2026, 02:44 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது நீண்ட நாள் காதலி ஹர்ஷலா பாட்டீலை திருமணம் செய்து கொண்ட ஜெய் துதானே, மனைவி, சகோதரர் மற்றும் அவரது மனைவி ஆகியோருடன் வெளிநாட்டு தேனிலவுக்கு புறப்பட்டிருந்தார்.

மோசடி புகாரில் தேனிலவுக்குச் சென்ற பிக் பாஸ் பிரபலம் மும்பை விமான நிலையத்தில் கைது!

மராத்தி பிக் பாஸ் பிரபலமும், நடிகர்-மாடலுமான ஜெய் துதானே, தனது மனைவியுடன் தேனிலவுக்குச் செல்லும் போது மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது நீண்ட நாள் காதலி ஹர்ஷலா பாட்டீலை திருமணம் செய்து கொண்ட ஜெய் துதானே, மனைவி, சகோதரர் மற்றும் அவரது மனைவி ஆகியோருடன் வெளிநாட்டு தேனிலவுக்கு புறப்பட்டிருந்தார்.

விமான நிலையத்தில் அவரது பாஸ்போர்ட் சோதனையின் போது, அவர் ரூ.5 கோடி மோசடி வழக்கில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாக அதிகாரிகள் போலீஸாருக்கு தகவல் அனுப்பினர். போலீஸ் அவரை விமான நிலையத்திலேயே கைது செய்தது.

இந்த மோசடி வழக்கு தொடர்பாக, ஜெய் துதானே போலி ஆவணங்கள் மூலம் ஒரு கடையை பலருக்கு மீண்டும் விற்று, ரூ.5 கோடி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் ஏற்கனவே அவருக்கு எதிராக தேடல் உத்தரவு (Lookout Circular) பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த விஷயம் ஜெய் துதானேவிற்கு முன்பே தெரிந்திருக்கவில்லை என்று தெரிகிறது.

கைது செய்யப்பட்ட போது நிருபர்களிடம் பேசிய ஜெய் துதானே, “என் மீதான குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது. இதில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. நான் கவலைப்பட மாட்டேன். இந்த ரூ.5 கோடி புகாரைக் கேட்கும்போது சிரிப்புதான் வருகிறது. ஒரு கடை பதிவு செய்யப்பட்டிருந்தால், அதை மீண்டும் விற்பது சட்டப்படி சாத்தியமில்லை. யாராவது என் மீதான புகாருக்கு ஆதாரம் காண்பிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கில் ஜெய் துதானேவின் தாயார், சகோதரி, தாத்தா மற்றும் பாட்டி ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் அனைவரின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் (FIR) இடம்பெற்றுள்ளன.

ஜெய் துதானே, மராத்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர். மாடலிங், உடல் பயிற்சியாளர் மற்றும் சில மராத்தி படங்களில் நடித்து வருகிறார். தற்போது அவர் போலீஸ் காவலில் உள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW