பிஸியான நாட்களை மிஸ் செய்கிறேன்: காயத்தால் ஓய்வில் இருக்கும் ராஷ்மிகா மந்தனா கவலை
நடிகை ராஷ்மிகா மந்தனா கேரள படப்பிடிப்பில் நடனமாடும்போது தவறி விழுந்து தொடை மற்றும் இடுப்பில் காயமடைந்ததால் 6 வார ஓய்வு.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து காரணமாக காயமடைந்து, தற்போது வீட்டில் ஓய்வில் இருக்கிறார். நடனமாடிக் கொண்டிருந்த வேளையில் தவறி கீழே விழுந்ததில் அவரது தொடை மற்றும் இடுப்புப் பகுதியில் தசைநார் கிழிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, டாக்டர்கள் ஆறு வாரங்கள் கண்டிப்பான ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.
இயக்குனர் ரவீந்திர புள்ளே இயக்கத்தில் உருவாகி வரும் தெலுங்கு ஆக்ஷன் திரில்லர் படம் 'மைசா'வில் ராஷ்மிகா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தில், கோண்டு இனப் பெண்ணாக அவர் நடித்து வருகிறார். அண்மையில் அவர் படத்திற்கான முக்கியமான சண்டைக் காட்சிகள் மற்றும் நீருக்கடியில் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்திருந்த நிலையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து முதலில் வெளியிட்ட பதிவில், "தொடர் வேலைகளுக்கு இடையே இந்த கட்டாய ஓய்வு கடவுள் கொடுத்த வரமாக இருக்கட்டும்" என மிகுந்த நம்பிக்கையுடன் பகிர்ந்திருந்தார். ஆனால், தற்போது சில நாட்கள் ஓய்வில் இருப்பதால், முன்பு போல் மிஷின் போல் இயங்க முடியாததும், வீட்டிலேயே அடைபட்டுக் கிடப்பதும் அவருக்கு மனக் கவலையை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
"வீட்டிலேயே எனது பொழுதுகள் கடந்து செல்கின்றன. இந்த கட்டாய ஓய்வு எனக்கு கவலையையே அளிக்கிறது. பிஸியான படப்பிடிப்பு நாட்களை நான் மிகவும் 'மிஸ்' செய்கிறேன். எனது உடல்நலம் முழுமையாக தேறியவுடன், மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு செல்ல ஆர்வமாக இருக்கிறேன்" என்று ராஷ்மிகா மனம் திறந்துள்ளார். ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் அவரது விரைவான குணமடைவிற்காக வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.