இலங்கையில் மூன்றாவது இதய மாற்றுச் சத்திரசிகிச்சை வெற்றி: 14 வயது சிறுவனுக்கு மறுவாழ்வு
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 14 வயதுடைய சிறுவனுக்கு இதய மாற்றுச் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்த 19 வயது இளைஞனின் இதயம், விசேட பொலிஸ் பாதுகாப்புடன் கம்பஹாவிலிருந்து கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டு சிறுவனுக்குப் பொருத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் மூன்றாவது இதய மாற்றுச் சத்திரசிகிச்சை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று முன்தினம் (26) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதயம் மிகவும் பலவீனமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 14 வயதுடைய சிறுவன் ஒருவருக்கே இந்த இதய மாற்றுச் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் விசேட வைத்திய நிபுணர் அனில் அபேவிக்ரம தலைமையிலான விசேட வைத்தியக் குழுவினர் இந்தச் சத்திரசிகிச்சையை மேற்கொண்டுள்ளனர்.
மாலை 5 மணிக்கு ஆரம்பமான சத்திரசிகிச்சை சுமார் ஏழு மணித்தியாலங்கள் நீடித்து நள்ளிரவு 12 மணியளவில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
விபத்தொன்றில் சிக்கி மூளைச்சாவடைந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவரின் இதயமே குறித்த சிறுவனுக்குப் பொருத்தப்பட்டுள்ளது.
கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த இளைஞன் மூளைச்சாவடைந்ததைத் தொடர்ந்து, அவரது இதயத்தைத் தானமாக வழங்குவதற்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய சத்திரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனுக்கு அந்த இதயத்தைப் பொருத்துவதற்கு வைத்தியக் குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
தானமாகப் பெறப்படும் இதயத்தைக் குறுகிய காலத்திற்குள் மற்றொரு நோயாளிக்குப் பொருத்த வேண்டியிருந்ததால், கம்பஹா வைத்தியசாலையிலிருந்து கொழும்புக்கு அதனை விரைவாகக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதற்காக விசேட உலங்கு வானூர்தியொன்று தயார் செய்யப்பட்டிருந்த போதிலும், கம்பஹா பிரதேசத்தில் பெய்த கடும் மழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக அதனைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, வைத்தியக் குழுவினர் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவைத் தொடர்புகொண்டு, இதயத்தைத் தரைவழியாக விரைவாகக் கொழும்புக்குக் கொண்டுவருவதற்கு உதவுமாறு கோரியுள்ளனர்.
உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் மா அதிபர், கம்பஹாவிலிருந்து கொழும்பு வரையான பிரதான வீதியில் போக்குவரத்தைத் தற்காலிகமாக நிறுத்தி, விசேட பொலிஸ் பாதுகாப்புடன் இதயத்தைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இதற்கமைய, தேவையான காலப்பகுதிக்குள் தானமாகப் பெறப்பட்ட இதயம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டு 14 வயதுடைய சிறுவனுக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது.
உறுப்பு தானம் வழங்கிய குடும்பத்தினர், விசேட வைத்தியக் குழுவினர் மற்றும் பொலிஸாரின் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் மூலம் இந்த இதய மாற்றுச் சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.