பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்குமா? முட்டை விலை தொடர்பிலும் அறிவிப்பு
எதிர்வரும் டிசம்பர் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் டிசம்பர் பண்டிகைக் காலத்தில் இலங்கையில் கோழி இறைச்சியின் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தையில் போதுமான அளவு கோழி இறைச்சி கையிருப்பில் உள்ளதால், விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நத்தார் உள்ளிட்ட டிசம்பர் மாதப் பண்டிகைகளை முன்னிட்டு கோழி இறைச்சிக்கான நுகர்வோர் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், உறைநிலைப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி போதுமான அளவு கையிருப்பில் உள்ளதால், பண்டிகைக் காலத்தில் விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் தற்போது முட்டையின் விலை அதிகரித்துள்ளமைக்கு நுகர்வோர் தேவை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி வீழ்ச்சி ஆகியன பிரதான காரணங்களாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோழித் தீவன உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் சோளத்திற்குத் தட்டுப்பாடு நிலவுவதால், அதற்குப் பதிலாக அரிசியைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக முட்டை உற்பத்தியில் குறிப்பிட்டளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கோழிப்பண்ணைகளில் பரவிய சில வைரஸ் நோய்களும் முட்டை உற்பத்தி குறைவடைவதற்குக் காரணமாக அமைந்துள்ளன.
தற்போது சந்தையில் முட்டையொன்று 39 ரூபா முதல் 40 ரூபா வரையான விலையில் விற்பனை செய்யப்படுவதாக அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
குறுகிய காலத்திற்குள் முட்டை உற்பத்தியைக் கணிசமாக அதிகரிப்பது கடினமான விடயம் என்பதால், எதிர்வரும் காலங்களில் முட்டையின் விலை சந்தையின் தேவை மற்றும் விநியோகத்தைப் பொறுத்தே அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.