இன்ஸ்டாகிராம் ஊடாக காதலித்த மாணவியை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன் உள்ளிட்ட நால்வர் கைது
கன்னியாகுமரியில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய மாணவியை விடுதி மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன் உள்ளிட்ட நால்வரை பொலிஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி பகுதியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய காதலன் மற்றும் அவரது நண்பர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த குறித்த மாணவி இன்ஸ்டாகிராம் ஊடாக தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழகி காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், மாணவியை வசப்படுத்திய காதலன், அவரை விடுதியொன்றுக்கு அழைத்துச் சென்று பலவந்தப்படுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததோடு, அதனை காணொளியாகவும் பதிவு செய்து கொண்டுள்ளார்.
பின்னர் அந்த ஆபாசக் காணொளியைக் காட்டி மாணவியை மீண்டும் தனிமையில் வருமாறு மிரட்டியுள்ளதுடன், மாணவி அதற்கு மறுப்புத் தெரிவித்ததால் அக்காணொளியை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியதாகவும் தெரியவந்துள்ளது.
இதனால் மனமுடைந்த மாணவி, தனது உறவினர் முறையான இளைஞர் ஒருவரிடம் இது குறித்துத் தெரிவித்து அழுதுள்ளார். எனினும், மாணவிக்கு உதவுவது போல் பாசாங்கு செய்த அந்த உறவினர் இளைஞன், மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததோடு தனது நண்பரின் அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் ஒரு வார காலம் அடைத்து வைத்துள்ளார்.
அங்கு வைத்து மதுபானம் வாங்கிக் கொடுத்து மாணவியை மிரட்டி, நண்பர்களுடன் இணைந்து தொடர் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தியுள்ளார்.
ஒரு வார காலம் கடுமையான சித்திரவதைகளை எதிர்கொண்ட மாணவி, அங்கிருந்து தப்பித்து வீடு திரும்பிய பின்னர் நடந்த விடயங்கள் தொடர்பில் பெற்றோரிடம் கதறி அழுது கூறியுள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோரினால் பொலிஸ் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
பெற்றோரின் முறைப்பாட்டையடுத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சிறுமிகள் மீதான பாலியல் குற்றத் தடுப்புச் சட்டமான போக்சோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மாணவியின் காதலன் மற்றும் உடந்தையாக இருந்த நண்பர்கள் உட்பட நால்வரையும் கைது செய்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.