தாயின் சடலத்துடன் காரில் தப்பியோடிய மகள் மற்றும் மருமகன் சிக்கியது எப்படி?
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவப் பீட மூத்த விரிவுரையாளர் வைத்தியர் தயாளினி திலீபன் (54) படுகொலை செய்யப்பட்ட சம்பவம், குடும்பத் தகராறு எத்தகைய கொடூரமான முடிவைத் தரும் என்பதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது.
கடந்த ஆண்டு தனது தாயின் எதிர்ப்பையும் மீறி 18 வயது பூர்த்தியானவுடன் திவாகர் (20) என்ற இளைஞனைப் பதிவுத் திருமணம் செய்துகொண்ட சுவித்தியா (19), சில மாதங்களிலேயே கணவனுடன் ஏற்பட்ட பிணக்கினால் தாய் வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
தாயின் வழிகாட்டலில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், ஒருதலைப்பட்சமாக விவாகரத்து கிடைத்துவிடும் என்ற அச்சத்தில் திவாகர் கடந்த 17-ம் தேதி நள்ளிரவு வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கியுள்ளார். அங்கு மனைவியிடம் சமாதானம் பேசியவர், தங்களின் வாழ்க்கைக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் தாயைக் கொலை செய்யத் தூண்டியதாகக் கூறப்படுகிறது.
திவாகர் அளித்த வாக்குமூலத்தின்படி, தூக்கத்தில் இருந்த விரிவுரையாளரின் கால்களை அவரது மகளே அழுத்திப் பிடிக்க, தான் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளார். கொலைக்குப் பிறகு ஆதாரங்களை மறைக்கத் திட்டமிட்ட இருவரும், சடலத்தைப் படுக்கை விரிப்பால் சுற்றி விரிவுரையாளரின் காரின் பின்புறத்தில் மறைத்து வைத்துள்ளனர்.
பின்னர், காரிலேயே சடலத்துடன் பயணித்து தனங்கிளப்பு பகுதியில் உள்ள பற்றைக்காட்டில் உடலை வீசியுள்ளனர். அங்கிருந்து தப்பியோடிய அவர்கள், வழியில் பரந்தன் பகுதியில் விரிவுரையாளரின் வங்கி அட்டையைப் பயன்படுத்திப் பணத்தைப் பெற்றுக்கொண்டதோடு, திருகோணமலையில் அவரது நகைகளை அடமானம் வைத்து வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளனர்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் பிடிபட்ட விதம் மிகவும் சுவாரஸ்யமானது. விரிவுரையாளரையும் அவரது மகளையும் காணவில்லை என மகன் அளித்த புகாரை ஆரம்பத்தில் பொலிஸார் சாதாரண குடும்பப் பிரச்சினையாகக் கருதினர். ஆனால், பல்கலைக்கழக சமூகத்தின் அழுத்தம் மற்றும் மகன் வழங்கிய டிஜிட்டல் ஆதாரங்கள் விசாரணையைத் திசைதிருப்பின.
குறிப்பாக, திருகோணமலையில் காரில் எரிபொருள் நிரப்பப்பட்டபோது பயன்படுத்தப்பட்ட QR குறியீடு மற்றும் வங்கிப் பரிவர்த்தனைகளை வைத்து விசேட பொலிஸ் குழுவினர் திருகோணமலை விரைந்தனர். அங்கு வாடகை வீட்டில் பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்து யாழ்ப்பாணம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தியபோது, கொலைச் சம்பவம் அம்பலமானது.
தற்போது மீட்கப்பட்ட சடலம் உருக்குலைந்த நிலையில் இருந்ததால் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டே கொல்லப்பட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற பயத்தினாலேயே கணவனுக்கு உடந்தையாக இருந்ததாக மகள் வாக்குமூலம் அளித்துள்ள போதிலும், பொலிஸார் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு கல்விமானின் வாழ்க்கை, குடும்பப் பூசலால் இத்தகைய துயரமான முறையில் முடிவுக்கு வந்தது யாழ். சமூகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.