ஊறுகாய் தர மறுத்ததால் ஏற்பட்ட தகராறு; ஆசிரமப் பள்ளியில் மாணவி மீது கத்திக்குத்து தாக்குதல்

குஜராத்தில் பழங்குடியின மாணவர்களுக்கான ஆசிரமப் பள்ளியில், ஊறுகாய் தொடர்பான சிறிய தகராறு வன்முறையாக மாறி 15 வயது மாணவி மீது சக மாணவி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஊறுகாய் தர மறுத்ததால் ஏற்பட்ட தகராறு; ஆசிரமப் பள்ளியில் மாணவி மீது கத்திக்குத்து தாக்குதல்

குஜராத் மாநிலம் தாபி மாவட்டத்தில் உள்ள ஆசிரமப் பள்ளியில், ஊறுகாய் தொடர்பான சிறிய வாக்குவாதம் கொடூரமான தாக்குதலாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வலோட் பகுதியில் உள்ள அம்பாக் கிராமத்தில் பழங்குடியின மாணவர்களுக்கான அரசு நிதியுதவி பெறும் ஆசிரமப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கிப் படிக்கும் 15 வயதுடைய இரண்டு மாணவிகளுக்கு இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தன்று இரவு, பள்ளியின் சாப்பாட்டுக் கூடத்தில் மாணவிகள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு மாணவி சாதம் வாங்குவதற்காக எழுந்துள்ளார். இதையடுத்து, அருகில் இருந்த ஊறுகாய் பாட்டிலை எடுத்து வருமாறு அவரது தோழி கேட்டுள்ளார். ஆனால் அந்த மாணவி ஊறுகாய் எடுத்துத் தர மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த அந்த மாணவி, சாப்பாட்டு மேஜையில் இருந்த கத்தியை மறைத்து எடுத்துச் சென்றதாகவும், பின்னர் கைகழுவச் சென்ற சக மாணவியை பின்தொடர்ந்து குளியலறைக்கு சென்றதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அங்கு வைத்து அந்த மாணவியின் கழுத்தை நெரிக்க முயன்றதுடன், கத்தியால் அவரது கைகள் மற்றும் உடலில் தாக்கியதாக கூறப்படுகிறது. மாணவியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த விடுதி காப்பாளர் மற்றும் பள்ளி ஊழியர்கள், காயமடைந்த மாணவியை மீட்டு சூரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் வலோட் போலீசார் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தாக்குதல் நடத்திய 15 வயது மாணவியை போலீசார் கைது செய்து, சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியுள்ளனர்.

இரு மாணவிகளும் இந்த பள்ளியில் சேர்ந்து 10 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், அவர்களுக்குள் முன்விரோதம் எதுவும் இல்லை என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒரு சிறிய உணவு தொடர்பான பிரச்சினை இவ்வளவு பெரிய வன்முறையாக மாறியது தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க