நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 17 வயது சிறுமி – 6 பேர் கைது
சென்னை பரங்கிமலை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனது நண்பர்கள் என்று நம்பிச் சென்ற இடத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பரங்கிமலை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது நண்பர்கள் என்று நம்பிய சில இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் சம்பவம் குன்றத்தூர் பகுதியில் நடந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, சிறுமியின் பெற்றோர் போரூர் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். உடனடியாக வழக்குப் பதிவு செய்த பொலிசார், பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் சாட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணையை தொடங்கினர்.
பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையில், சிறுமி தனது நண்பர் ஒருவரின் உடல்நிலை சரியில்லாததால் அவரைப் பார்ப்பதற்காக குன்றத்தூர் பகுதிக்குச் சென்றதாகவும், அங்கு அவருக்கு நண்பர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்வதாக கூறி அழைத்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
ஆனால், அந்த இளைஞர் வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், தனிமையான காலி இடத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அவர் தனது வேறு சில நண்பர்களையும் அங்கு வரவழைத்து, சிறுமியை கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாக, சிறுமியின் நண்பர் உள்ளிட்ட 6 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவத்தில் மற்ற யாரேனும் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் பொலிசார் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கை சமர்ப்பிப்பதற்கான தயாரிப்பிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.